அரசியல் விளையாட்டில் திண்டாடும் விளையாட்டு! ”அவுட்” ஆகப்போவது யார்?

கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவராக விளையாட்டு அமைச்சரால் நியமிக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் அர்ஜூன ரணதுங்க, பின்னர் சந்திரிகாவின் சுதந்திரக் கட்சி அரசில் அமைச்சராகவும், ஜனாதிபதித் தேர்தல்களில் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேனவையும் ஆதரித்தவர். அடுத்து ஐக்கிய தேசிய கட்சி தலைமையைக் கைப்பற்றி ரணிலை ”அவுட்” ஆக்க எத்தனித்தவர். இவரை எவ்வாறு இடைக்கால சபைத் தலைவராக ரணில் அனுமதிப்பார்?
இலங்கை நாளாந்தம் சந்திக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாகப் பதிந்து கூட்டினால் அரைச் சதத்தை (கிரிக்கெட் பாசையில்) தாண்டும். அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் இவற்றுடன் இன்னொன்றாக விளையாட்டுப் பிரச்சனையும் சேர்க்கப்பட்டு சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. இங்கு குறிப்பிடப்படும் விளையாட்டு கிரிக்கெட் என்று கூறப்படும் துடுப்பாட்டம். இது வெள்ளையர்களால் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட மேல்மட்ட விளையாட்டு.

ஆரம்பத்தில் இது பிரித்தானிய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட நாடுகளில் பிரபல்யம் பெற்றது. ஒருநாள் ஆட்டம், இருபது ஓவர் ஆட்டம், ஐம்பது ஓவர் ஆட்டம், ஐந்து நாள் டெஸ்ட் ஆட்டம் என்று பல்வேறு வகைகளில் பரிமாணம் பெற்று இன்று அரசியல் அரங்கையே சிப்பிலி ஆட்டும் ஒன்றாக வளர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக இலங்கை அரசியலில் இதுவே உச்சாடன வார்த்தை. கிரிக்கெட்டுக்கான நிர்வாகசபை, இடைக்கால சபை, நீதிமன்ற தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் ஏகமனதான தீர்மானம் என்று பல கட்டங்களாக இது நீட்சி பெற்றுச் செல்கின்றதாயினும், முடிவில் யார் அவுட் ஆகுவார் என்பதை இப்போது சொல்ல முடியாதுள்ளது. சொல்லப்போனால் இலங்கையின் இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சி குரங்கு வால்போல் நீண்டு செல்லும் பாதையில் கிரிக்கெட் பிரச்சனையும் சேர்ந்து விடும்போல் தெரிகிறது.

விளையாட்டுத் தானே என்று இதற்குத் தீர்வு காண முடியாவிடின், அரசியலில் சில தலைகள் உருட்டப்படும் (கிரிக்கட் மைதானத்தில் பந்தை உருட்டுவது போன்று). ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் றொசான் ரணசிங்கவுக்கும் இடையிலான ஆட்டம், மத்தியஸ்தரின்றி ”சிக்ஸர்” வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி என்ற பதவி வழியான ரணிலின் எதேச்சாதிகார உத்தரவுக்குப் பணிய மறுத்த அமைச்சர் றொசான் ரணசிங்கவை பதவி நீக்க வேண்டுமென்ற உள்வீட்டு முணுமுணுப்பு இப்போது காற்றில் கலந்து ஷஸ்பின்| வேகத்தில் சுழன்றடிக்கிறது.

தற்போதைய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்ததால் மட்டும் இந்தப் பிரச்சனை எழுந்ததாகக் கூறமுடியாது. இன்றைய சூழ்நிலையில் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதித்துள்ள இடைக்காலத்தடை எதிர்பாராதது என்கின்றனர் இதனுடன் நெருக்கமான உறவு கொண்டவர்கள்.

ஊழல், நிதிக்கையாடல், வீரர்கள் தெரிவில் பாரபட்சம், அரசியல் ஆதிக்கம் என்ற குறிப்பிடக்கூடிய காரணிகளால் பல வருடங்களாக இலங்கை கிரிக்கெட் சபை பொதுவெளியில் விமர்சிக்கப்பட்டு வந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராக தாம் இருந்தபோது (1980 – 1989) பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்குமாறு ஜனாதிபதியால் பணிக்கப்பட்டதாகவும், அதனைச் செவ்வனே நிறைவேற்றியதால் இலங்கையின் கிரிக்கெட் தரம் சர்வதேசத்துக்கு உயர்ந்தது என்றும் கூறும் ரணில், 45 ஆண்டுகளுக்கு முந்திய நிலாக்காலத்தை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்.

2020ல் கோதபாய ராஜபக்சவின் அமைச்சரவையில் மகிந்தவின் மகனான நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனமானதை அவரது கனாக்காலம் என்பர். ரக்பி விளையாட்டு வீரரான நாமலிடம் அகப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சு சொல்லொணாப் பிரச்சனைகளுக்கு உள்ளானது. இவரின் செயற்பாடுகளையும் ஊழல்களையும் பகிரங்கமாக விளாசித் தள்ளியவர் கிரிக்கெட் ஜாம்பவான் அர்ஜூன ரணதுங்க.

1996ல் உலகக் கிண்ண சம்பியனாக இலங்கை அணி வென்றபோது இதன் தலைவராக அமைந்தவர் அர்ஜுன ரணதுங்க. உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு இவர் அடித்த கடைசி பவுன்டரி (நான்கு ரன்கள்) கிரிக்கெட் வரலாற்றில் என்றும் பொன்னெழுத்தில் இருக்கும்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சந்திரிக குமாரதுங்கவின் தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்ற இவர் அமைச்சரானார். 2010ம் ஆண்டில் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை ஆதரித்தவர், 2015ல் மைத்திரிபால சிறீசேன போட்டியிட்டபோது அவரின் ஆதரவாளரானார். அதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து தலைமைப் பதவியை கைப்பற்றுவதற்கும் முனைந்தவர் அர்ஜூன ரணதுங்க.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறிய அர்ஜூன, கடந்த வாரம் கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவராக விளையாட்டுத்துறை அமைச்சர் றொசான் ரணசிங்கவினால் நியமனமானதையடுத்தே புதிய பிரச்சனை பூதாகரமாகக் கிளம்பியது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆயுட்கால தலைவராக தம்மை ஆக்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைப் பதவிக்கு ஆப்பு வைக்கப் புறப்பட்ட அர்ஜூன ரணதுங்கவை கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவராக செயற்பட எவ்வாறு அனுமதிக்க முடியும். அதுவும் ஜனாதிபதியின் ஆலோசனை இன்றியே இந்த நியமனம் இடம்பெற்றது என்பது இன்னொரு விடயம். அர்ஜூனவின் இளைய சகோதரரும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க ரணிலின் தலைமையில் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சராக இப்போது பதவி வகிப்பதால் அர்ஜூனவை அரவணைக்க ரணில் தயாராக இல்லை.

மறுபுறத்தில் கிரிக்கெட் உயர்நிலை அதிகார சபையை பதவி நீக்கும் தீர்மானமொன்று நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை முன்மொழிய, அரச தரப்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வழிமொழிந்ததால், சபாநாயகரின் முடிவுக்கிணங்க வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேறியது.

நாடாளுமன்றத் தீர்மானம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறும் அதிகார சபையினர் பதவி விலக முடியாதென அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகாதெனவும், இத்தீர்மானத்துக்கு கிரிக்கெட் சபை இணங்காது எனவும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச அறிவித்து குட்டையை மேலும் குழப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தீர்மான முடிவு பொருத்தமற்றது என்று சுட்டியுள்ள இவர், இதனுடன் தொடர்புடைய சட்டங்களின்படி கிரிக்கெட் சபை விவகாரம் கையாளப்பட வேண்டுமென்று கூறியுள்ளார். இந்தப் பிரச்சனைக்குள் முக்கியமானவராகச் சிக்குண்டுள்ளவர் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதி மகேசன். இந்த வருடம் ஜனவரி மாதம் இப்பதவியை ஏற்ற மகேசன் முன்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தவர். உருவாகியுள்ள புதிய பிரச்சனை சம்பந்தமாக சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் அவரின் கருத்தின் அடிப்படையில் தமது அமைச்சு நடவடிக்கை எடுக்குமென்றும் கூறியுள்ளார்.

இப்போது பல கேள்விகளுக்கு விடை காணவேண்டிய நிலைமையை கிரிக்கெட் விளையாட்டு உருவாக்கியுள்ளது.

தமக்குத் தெரிவிக்காது இடைக்கால சபையை விளையாட்டுத்துறை அமைச்சர் உருவாக்கினார் என்பது ஜனாதிபதியின் வாதம். கிரிக்கெட் சபையின் உயர் நிர்வாகத்தை பதவி விலகுமாறு நாடாளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது சபாநாயகரின் அறிவிப்பு.

ஆனால், இத்தீர்மானம் செல்லுபடியாகாது என்பது பிரதிச் சபாநாயகரின் கருத்து. அதேசமயம் தீர்மானத்தை ஏற்று பதவி விலக மேற்படி சபை மறுத்துள்ளது. இடைக்கால சபை நியமித்தல் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரண்டு வார காலத்துக்கு நிறுத்தியது.

மறுபுறத்தில் 18 பேர் கொண்ட இயககுனர் சபையை தாமதமின்றி நியமிக்க ரணில் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில் சர்வதச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

பார்க்கப் போனால் பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விளையாட்டு இலங்கையில் அரசியலாக்கப்பட்டு அல்லாடுகிறது. எல்.பி.டபிள்யு, விக்கெட் கவிழ்ப்பு, பந்து பிடித்தல் (காச்), ஓட்டத்தின்போது அவுட் (ரன் அவுட்) என்று பலவகை ஆட்ட இழப்புகள் கிரிக்கெட்டில் உண்டு.

இலங்கையின் தற்போதைய நவீன கிரிக்கெட் விளையாட்டில் ஷஅவுட்| ஆகப்போவது யார்? எவ்வாறு ஷஅவுட்| ஆக்கப்படுவார்?

பனங்காட்டான்