கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் வருவாரா?

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மாநாட்டை 2024 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடத்­து­வ­தென வவு­னி­யாவில் கூடிய கட்­சியின் மத்­திய குழு தீர்­மா­னித்­துள்­ளது. அம் ­மா­நாட்டில் புதிய நிர்­வா­கமும் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளது. மாநாடு நடை­பெ­று­வ­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் பத­வி­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் கோரப்­படும் எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­சியின் தலை­வ­ராக சுமந்­திரன் தெரி­வு­செய்­யப்­ப­டலாம். அதற்­கான நகர்­வு­க­ளையே பல நாட்­க­ளாக சுமந்­திரன் செய்­து­கொண்டு வரு­கின்றார். இதற்­காக அவர் கிழக்­கி­லி­ருந்து வடக்­காக வியூ­கத்தை அமைத்து செயற்­பட்டு வரு­கின்றார்.

பொதுக்­கு­ழுவில் கிழக்கின் பெரும்­பான்மை சுமந்­தி­ர­னுக்குக் கிடைக்கும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டமும் , திரு­கோ­ண­மலை மாவட்­டமும் அவ­ரது செல்­வாக்கின் கீழேயே உள்­ளது. அம்­பாறை மாவட்­டமும் பெரி­ய­ள­விற்கு விலகிச் செல்­லாது. யாழ்ப்­பாண மாவட்­டத்­திலும் உள்­ளூ­ராட்சி சபையின் முன்னாள் உறுப்­பி­னர்கள் சுமந்­தி­ரனின் ஆத­ர­வா­ளர்­க­ளாக இருப்­பதால் பெரும்­பான்மை கிடைக்­கலாம். ஏனைய மாவட்­டங்­களில் வாய்ப்­புக்கள் குறைவு. கிளி­நொச்சி மாவட்­டத்தில் அறவே இல்லை எனலாம்.

போட்­டி­யா­ளர்­க­ளாக மாவையும் சிறீ­த­ரனும் இறங்கக் கூடும். சில வேளை சட்­டத்­த­ரணி தவ­ரா­சாவும் இறங்­கலாம். கிழக்கின் பாரம்­ப­ரிய கட்­சிக்­கா­ரர்கள் மாவையை ஆத­ரிக்­கலாம். ஏனைய வேட்­பா­ளர்­க­ளுக்கும் சுமந்­தி­ர­னுக்கும் இடையே இடை­வெளி அதிகம் என்­பதால் வாய்ப்­புக்கள் சுமந்­தி­ர­னுக்கே உண்டு. சுமந்­திரன் எப்­போதும் இயங்கு நிலை அர­சி­யல்­வா­தி­யாக இருப்­பதும் , சர்­வ­தேச தொடர்­பு­களை அதிகம் கொண்­டி­ருப்­பதும், ஊட­கங்­களின் கவ­னிப்­புக்­கு­ரி­ய­வ­ராக இருப்­பதும் தமிழ் மத்­தி­ய­த­ர ­வர்க்­கத்­தி­ன­ரி­டையே அவ­ரது செல்­வாக்கை உயர்த்­தி­யுள்­ளது. யாழ்ப்­பான மத்­தி­ய­த­ர­ வர்க்­கத்­தி­னரின் கருத்து ‘சுமந்­தி­ரனை விட்டால் கட்­சியில் வேறு யார் இருக்­கினம்’ என்­பதே.

தலைவர், செய­லாளர் பத­வி­களில் ஒரு பதவி வடக்­கிற்கு வழங்­கினால் மற்­றைய பத­வியை கிழக்­கிற்கு வழங்­கு­வதே தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மர­பாகும். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே துரை­ரா­ச­சிங்கம் கட்­சியின் செய­லா­ள­ராக பணி­யாற்­றினார். அவ­ரது பதவி வில­கலின் பின்னர் மருத்­துவர் சத்­தி­ய­லிங்கம் தற்­கா­லிக செய­லா­ள­ரா­கவே உள்ளார். சாணக்­கி­யனின் பாட்­டனார் இரா­ச­மா­ணிக்கம் முன்னர் தலை­வ­ராக பத­வி­வ­கித்தார்.  இந்தத் தடவை செய­லாளர் பதவி சில­வேளை சாணக்­கி­ய­னுக்கு கிடைக்­கலாம். அது சாணக்­கி­ய­னுக்குக் கிடைத்தால் சுமந்­தி­ரனின் பாதை முழு­மை­யாக சுத்­த­மாகி விடும். சாணக்­கியன் சுமந்­தி­ரனின் நிகழ்ச்சி நிர­லுக்­குள்­ளேயே இருக்­கின்றார்.

சாணக்­கி­ய­னுக்கு கிழக்கில் மட்­டு­மல்ல, வடக்­கிலும் புலம் பெயர் நாடு­க­ளிலும் ஆத­ரவு உண்டு. கிழக்கில் தமிழ்த் தேசி­யத்தை தக்­க­வைத்­தி­ருப்­பது சாணக்­கியன் தான் என்­பது தமிழ் மக்­களின் பொது­வான கருத்து. வயதில் குறைந்­த­வ­ராக துணிந்து முன்னே செல்லும் போராட்ட அர­சி­யல்­வா­தி­யாக , மும்­மொழி வல்­லு­ன­ராக, இரா­ச­மா­ணிக்­கத்தின் பேர­னாக அவர் விளங்­கு­வது அவ­ரது ஆத­ர­வுத்­த­ளத்தை வெகு­வாக  உயர்த்­தி­யுள்­ளது.

பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வாக கொழும்பில் நடை­பெற்ற கூட்­டத்தில் ‘நிச்­ச­ய­மாக நாம் பாற்­சோறு உண்ண மாட்டோம்’ என சாணக்­கியன் துணிந்து கூறி­யமை தமி­ழர்­களை வெகு­வாக கவர்ந்­துள்­ளது. நண்பர் ஒருவர் ‘அரி­வாளை சரி­யாக சாணக்­கியன் போட்­டி­ருக்­கின்றார்’ என பாராட்­டி­யி­ருக்­கின்றார்.

ஆளு­மைத்­தி­றனில் கிழக்கின் ஏனைய தமி­ழ­ரசுக் கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கும் சாணக்­கி­ய­னுக்கும் இடையே இடை­வெளி அதிகம். இரா­ஜ­துரை முன்னர் கிழக்கில் கோலேச்­சி­யது போல சாணக்­கியன் தற்­போது கோலோச்­சு­கின்றார். இது விட­யத்தில் சாணக்­கி­யனின் ஆளுமை இரா­ஜ­து­ரையை விட அதிகம் எனலாம். சாணக்­கி­யனைப் போல மும்­மொழி ஆற்றல் இரா­ஜ­து­ரை­யிடம் இருக்­க­வில்லை எனினும் அடுக்கு மொழி பேச்­சாளர் என்ற வகையில் இரா­ஜ­து­ரைக்கும் தமிழ் உலகம் எங்கும் ஒரு கௌரவம் இருந்­தது. இரா­ஜ­து­ரையின் பேச்சைக் கேட்­ப­தற்­கென்றே அலை­பாயும் கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில் இருந்­தது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மைப்­ப­த­வியை கைப்­பற்­று­வது சுமந்­தி­ரனின் தற்­கா­லிக இலக்கே ஒழிய, நிரந்­தர இலக்கு அல்ல. நிரந்­தர இலக்கு தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பை மீளப் புன­ர­மைத்து அதற்கு தலை­வ­ரா­வதே, இதன் பின்னர் தான் தமிழ் மக்­களின் தலைவர் என்ற பெயர் அவ­ருக்கு கிடைக்கும். மேற்­கு­லகம் அவ்­வா­றான ஒரு நிலையில் சுமந்­திரன் இருப்­ப­தையே விரும்­பு­கின்­றது.

தமி­ழ­ரசுக் கட்­சிக்கு தலை­வ­ராக வராமல் தடி­யூன்றி பாய்ந்து கூட்­ட­மைப்­புக்கு தலை­வ­ராக முடி­யாது. கூட்­ட­மைப்பில் வலு­வான இருப்பு தமி­ழ­ரசுக் கட்­சிக்­குத்தான் உண்டு. மர­பு­ரீ­தி­யான கட்­சி­யாக இருப்­பதும், வடக்கு – கிழக்கு முகம் கொண்ட ஒரே­யொரு கட்­சி­யாக இருப்­பதும் இதற்குக் காரணம். கூட்­ட­மைப்பின் ஏனைய கட்­சிகள் தனித்து இருப்­புக்­கொண்ட கட்­சி­க­ளல்ல. அவை சார்­பு­ நி­லைக்­கட்­சி­களே. தனித்து போட்­டி­யிடின் அக்­கட்­சி­களில் இருந்து எவரும் வெல்­லக்­கூ­டிய வாய்ப்­புக்கள் இல்லை.

ஏனைய கட்­சி­களை மீண்டும்  கூட்­ட­மைப்பில் இணைப்­பது தொடர்­பாக சுமந்­தி­ரனும் முயற்சி செய்து வரு­கின்றார். ஏனைய கட்­சி­க­ளையும் தமி­ழ­ரசுக் கட்­சியின் மாவை பிரி­வையும் இணைத்து ஒரு அணியை வளர்ப்­ப­தற்கு இந்­தியா மிகவும் முயற்சி செய்­தது. விக்­னேஸ்­வ­ர­னையும் ஒரு­வ­ராக இவ்­வ­ணியில் இணைத்த போதும் இந்­தி­யா­வுக்கு தோல்­வியே கிடைத்­தது.

இன்னொரு பக்­கத்தில் கூட்­ட­மைப்பின் கட்­சிகள் பிரிந்­தி­ருப்­பது தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் செல்­வாக்கை உயர்த்­தி­யி­ருந்­தது. தொடர்ச்­சி­யாக அடை­யாளப் போராட்­டங்­களை முன்­னணி நடத்­து­வதும் ‘அவர்கள் மட்­டுமே போரா­டு­கின்­றனர்’ என்ற விம்­பத்­தையும் மக்கள் மத்­தியில் உரு­வாக்­கி­யுள்­ளது. எனவே, முன்­ன­ணியின் வளர்ச்­சியை தடுக்க வேண்­டு­மாயின் ஏனைய கட்­சிகள் ஐக்­கி­யப்­பட வேண்டும் என்­பது நிபந்­த­னை­யாக உள்­ளது. தனித்த அர­சி­யலை விட ஒருங்­கி­ணைந்த அர­சி­ய­லுக்கு மக்கள் மத்­தியில் எப்­போதும் செல்­வாக்கு உண்டு.

சுமந்­தி­ர­னுக்கு சவா­லான விடயம் பிரக்ஞை பூர்வ தமிழ்த்­தே­சிய சக்­தி­களின் ஆத­ரவும் இந்­திய அரசின் ஆத­ரவும் அவ­ருக்கு இல்­லா­மையே. பிரக்­ஞை­பூர்வ தமிழ்த்­தே­சிய சக்­திகள் இரண்டு குற்­றச்­சாட்­டுக்­களை சுமந்­திரன் மீது முன்­வைக்­கின்­றனர். அதில் முத­லா­வது சுமந்­திரன் இறைமை அர­சி­யலை அல்ல, அடை­யாள அர­சி­ய­லையே முன்­னெ­டுக்­கின்றார் என்­ப­தாகும். அடை­யாள அர­சியல் பார­பட்­சத்­துடன் தொடர்­பு­டை­யது. இறைமை அர­சியல் கட்சி அதி­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­யது. அடை­யாள அர­சி­ய­லுக்கு சோல்­பரி யாப்பின் 29 ஆவது பிரிவே போது­மா­னது. சமஸ்டி ஆட்சி எல்லாம் தேவை­யற்­றது.

‘தமிழ் மக்கள் ஒரு தேச­மாக இருப்­பது அழிக்­கப்­ப­டு­வதே இனப்­பி­ரச்­சினை’ என்ற புரி­தலும் சுமந்­தி­ர­னி­டத்தில் இல்லை. மேற்­கு­லக சக்­தி­களும், தென்­னி­லங்­கையின் லிப­ரல்­களும் அடை­யாள அர­சி­யலைத் தான் விரும்­பு­கின்­றன. தமிழ் மக்­களின் இறைமை அர­சி­யலை அவர்கள் ஏற்­க­வில்லை. மேற்­கு­ல­கத்தின் நிகழ்ச்சி நிரலும், தென்­னி­லங்கை லிப­ரல்­களின் நிகழ்­சி­நி­ரலும் அடை­யாள அர­சி­ய­லுக்கு உரி­யதே ஒழிய இறைமை அர­சி­ய­லுக்­கு­ரி­ய­தல்ல. இத் தரப்­பு­களின் நிகழ்ச்சி நிரலை நகர்த்தும் சுமந்­தி­ரனால் ஒரு போதும் இறைமை அர­சி­யலை முன்­னெ­டுக்க முடி­யாது என்­பது தமிழ்த்­தே­சி­யர்­களின் வாதம்.

2009 இல் ஆயு­தப்போர் மௌனிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இது­வரை காலம் பின்­பற்­றிய அர­சி­யலை ஏதோ ஒரு வகையில் முன்­கொண்டு செல்­வதா? அல்­லது அதனைக் கைவிட்டு விட்டு இணக்க அர­சி­யலை முன்­னெ­டுப்­பதா? என்ற விவாதம் எழுந்­தது. அதன் போது சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் இணக்க அர­சிலை முன்­னெ­டுப்­பது என்ற தீர்­மா­னத்­திற்கே வந்­தனர்.

சுருக்­க­மாகக் கூறு­வ­தாயின் ‘டக்ளஸ் நம்பர் ரூ’ என்ற நிலையை எடுக்க முற்­பட்­டனர். டக்ளஸ் தேவா­னந்தா நேர­டி­யாக இணக்க அர­சி­யலைச் செய்தார். இவர்கள் மறை­மு­க­மாக இணக்க அர­சி­யலை செய்ய முற்­பட்­டனர்.  இந்த இணக்க அர­சியல் கார­ண­மா­கத்தான் சம்­பந்­த­னுக்கு சொகுசு வீடு வாழ்நாள் வரை கொழும்பில் கிடைத்­தது. சம்­பந்­தனும் அதற்கு நன்­றிக்­க­ட­னாக சிங்கக் கொடியை உயர்த்தி ஆட்­டினார்.

இணக்க அர­சியல் என்ற தீர்­மா­னத்­திற்கு வந்த பின்னர் கட்­சி­யையும், மக்­க­ளையும் அதற்குள் கொண்­டு­வர சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் முயற்­சித்­தனர். மறு­பக்­கத்தில் புலம்­பெயர் தரப்பும் முன்­ன­ணியும் தமிழ்த்­தே­சிய அர­சி­யலில் உறு­தி­யாக நின்­றதால் மக்­களை மாற்றும் முயற்சி தோல்­வியில் முடிந்­தது. மறு­பக்­கத்தில் இணக்க அர­சி­ய­லினால் எந்­த­வொரு வெற்­றியும் கிடைக்­க­வில்லை. நாவற்­கு­ழி­யிலும் தையிட்­டி­யிலும் விகா­ரைகள் கட்­டப்­பட்ட போது நேரடி இணக்க அர­சி­யல்­கா­ரர்­க­ளி­னாலும், மறை­முக இணக்க அர­சி­யல்­கா­ரர்­க­ளி­னாலும் அதனைத் தடுக்க முடி­ய­வில்லை.

சுமந்­தி­ரனின் இணக்க அர­சியல் கார­ண­மாக தமிழ்த்­தே­சிய அர­சி­ய­லுக்குள் சுமந்­திரன் இல்லை. அதற்கு வெளியில் தான் அவர் நிற்­கின்றார் என்ற வாதம் தமிழ்த்­தே­சி­யர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இதன் சுருக்கம் ‘தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யலை அவர் நகர்த்­த­வில்லை என்­பதே’

இரண்­டா­வது குற்­றச்­சாட்டு நிகழ்ச்சி நிரல் தொடர்­பா­னது. தமிழ் அர­சி­யலின் மரபு ரீதி­யான அணு­கு­முறை தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யலை தெளி­வாக வரை­ய­றுத்து அதற்­கான நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுப்­பதே.தமி­ழ­ர­சுக்­கட்­சியும் அதன் பின்­ன­ரான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும் 1983 வரை இவ்­வா­றான நிகழ்ச்சி நிர­லையே முன்­னெ­டுத்­தன.

அதன் பின்னர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களும் அத­னையே முன்­னெ­டுத்­தனர் என்­பது வர­லாறு. புலிகள் அல்­லாத ஏனைய விடு­தலை இயக்­கங்­களும் 1987 ஆம் ஆண்டு இலங்கை -– இந்­திய ஒப்­பந்தம் வரை அத­னையே முன்­னெ­டுத்­தனர்.   இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­திற்கு பின்னர் அவை இந்­திய, இலங்கை நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுத்­தன என்­பது வேறு கதை.

சுமந்­திரன் தமிழ் மக்­களின் அர­சியல் இலக்கை வரை­ய­றுத்து அதற்­கான நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுக்­க­வில்லை. மாறாக மேற்­கு­ல­கத்­தி­னதும் சிங்­கள லிப­ரல்­க­ளி­னதும் நிகழ்ச்சி நிர­லையே முன்­னெ­டுக்­கின்றார் என்ற வாதத்தை தமிழ்த்­தே­சி­யர்கள் முன்­வைக்­கின்­றனர்.

சிங்­கள தேசத்தில் தூய்­மை­யான லிப­ரல்கள் என எவ­ரு­மில்லை. பெருந்­தே­சி­ய­வாத லிப­ரல்­களே உள்­ளனர். நெருக்­க­டிகள் வரும் போது பெருந்­தே­சி­ய­வாதம் பக்கம் நிற்­பது என்­பதே அவர்­க­ளது வர­லாறு. சிங்­கள லிப­ரல்கள் மட்­டு­மல்ல சிங்­கள இட­து­சா­ரி­களும் அதற்கு விதி­வி­லக்­காக இருக்­க­வில்லை. அமெ­ரிக்­காவின் முன்­னைய செல்­லப்­பிள்­ளை­யான ஜே.ஆர்.ஜய­வர்­தன தொடக்கம் தற்­போ­தைய செல்­லப்­பிள்­ளை­யான ஜே.ஆரின் மரு­மகன் ரணில் வரை இதுவே வர­லாறு.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதற்கு நல்ல உதா­ரணம். அவரை உலகம் சிங்­கள சமூ­கத்தில் உள்ள மிகப்­பெரும் லிப­ரல்­வா­தி­யா­கவே கரு­து­கின்­றது. அவர் தான் சந்­தி­ரிக்­காவின் தீர்­வுப்­பொதி பாரா­ளு­மன்­றத்தில் கிழித்­தெ­றி­வ­தற்கு கார­ண­மாக இருந்தார். தற்­போது சர்­வ­தேச விசா­ரணை ஒரு போதும் நடக்­காது எனக் கூறு­கின்றார். மனித உரிமை விவ­கா­ரத்தில் ‘இஸ்­ரே­லுக்கு ஒரு நீதி இலங்­கைக்கு ஒரு நீதியா? என மேற்­கு­ல­கத்தை கேட்­கின்றார். இட­து­சா­ரி­களில் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடக்கம் வாசு­தே­வ­நா­ண­யக்­காரா வரை வர­லாறு நாம் அனை­வரும் அறிந்­ததே.

இரண்­டா­வது, இந்­தியா சுமந்­தி­ர­னோடு இல்லை. அவர் மேற்­கு­லக விசு­வாசி என்­பதே இதற்குக் காரணம். இந்­தியா மேற்­கு­ல­கத்­தோடு சீனாவின் ஆதிக்­கத்தை தடுக்க ஒருங்­கி­ணைந்து செயற்­பட்­டாலும் தென்­னா­சி­யா­விற்குள் மேற்குலகின் ஆதிக்கத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. இந்தியா நண்பர்களை எதிர்பார்ப்பதில்லை எடுபிடிகளையே எதிர்பார்க்கின்றது. சுமந்திரனின் ஆளுமை எடுபிடியாக இருப்பதை ஒரு போதும் அனுமதிக்காது.

ஒரு மூத்த பத்திரிகையாளர் ‘இந்தியாவுடன் எடுபிடியாக இருக்க முடியுமே தவிர நண்பராக இருக்க முடியாது’ என ஒரு தடவை கூறினார். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு சுமந்திரன் ஒரு போதும் தயாராக இருந்ததில்லை. பெருந்தேசியவாதம் விரும்பாது என்பதும் சுமந்திரன் இந்தியாவுடன் நெருங்கிச் செல்லாமைக்கு ஒரு காரணம்.

இப்போது எழும் கேள்வி எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதே. இந்திய விசுவாசிகளும், மேற்குலக விசுவாசிகளும் விரைவில் ஒரு தற்காலிக சமரசத்திற்கு வருவர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீளப்புனரமைக்கப்படும். சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் பின்னர் கூட்டமைப்பின் தலைவராகவும் கட்டாயம் வருவார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்பில் ஒரு போதும் இணையாது. இந்திய விசுவாசிகளும், மேற்குலக விசுவாசிகளும் இறைமை அரசியலை ஒரு போதும் முன்னெடுக்கப்போவதில்லை தமிழ்த்தேசியர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு கொடுப்பர். புலம்பெயர் தரப்பின் தீவிர தமிழ்த்தேசியர்களும் முன்னணியோடு நிற்க வே முனைவர் இரு கட்சிமுறை ஒரு போக்காக வளரும்.மீண்டும் கூட்டமைப்பினதும், முன்னணியினதும் போட்டிக்களமாகவே தமிழ் அரசியல் இருக்கப்போகின்றது.

சி.அ.யோதிலிங்கம்