அதிகமான காணி உறுதிகளை வழங்கும் பிரதேச செயலகத்துக்கு மேலதிகமாக 25 மில்லியன் ரூபாய்!

“20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் ‘உறுமய’ தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவான காணி உறுதிப் பத்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கும் பிரதேச செயலகத்துக்கு, குளங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மொனராகலையில் இன்று (30) நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் “உறுமய” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 41,960 பயனாளிகளில் 600 பேருக்கு அடையாள உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு வெல்லவாயவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சற்று முன்னர் நடைபெற்றது.