அத்துலவுக்கு ஜனாதிபதி அநுர பொதுமன்னிப்பு வழங்கியமை முற்றிலும் தவறானது

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் கடந்த திங்கட்கிழமை (02) சிறை தண்டனை  விதிக்கப்பட்ட நபருக்கு  2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை பாரதூரமானது என ஐக்கிய மக்கள் சக்தியின்  களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பொதுமன்னிப்பு வழங்கும் போது அடிப்படை   வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த காலங்களில் பலமுறை  தீர்ப்பளித்துள்ள நிலையில் தான் குறுகிய நாட்களுக்குள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அனுதாபப் பிரேரணையின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தமிழ் மக்களின் விடுதலைக்கு அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் குரல்  கொடுத்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமைப்புக்கு  எதிர்ப்பு தெரிவித்து தமிழர்களின் உரிமைகளுக்காகவே அரசியலில் ஈடுபட்டார்.

அநுதாரபுரம் மேல் நீதிமன்றத்தில் எச்.சி 692018 இலக்க வழக்கில்  2025.05.02 ஆம் திகதியன்று   தண்டனைச் சட்டக்கோவை 386  பிரிவின் பிரகாரம்  அத்துல சேனாரத்ன என்பவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நபருக்கு 2025.05.12 ஆம் திகதி வெசாக் தினத்தன்று ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 2025.05.02 ஆம் திகதி தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிக்கு 2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை மிகவும் பாரதூரமானது.

ஜனாதிபதி மன்னிப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் கடந்த காலங்களில் உயர்நீதிமன்றம் பல தீர்ப்புக்களை வழங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்து அவருக்கு தண்டப்பணம் விதித்துள்ளது. ஆகவே இந்த பதிவுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.