எமது மக்களுக்கு வேறு விடயங்கள் இருந்தாலும் அபிவிருத்தி முக்கியம். அதனை உணர்ந்து அன்றே செயற்பட்டவர் தான் செனட்டர் பொ.நாகலிங்கம். அதனால் தான் அவரால் சுன்னாகம் பொதுச்சந்தை மற்றும் சுன்னாகம் பொது நூலகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய முடிந்தது. இப்போதும் எமது மக்களுக்கு அபிவிருத்தி முக்கியம் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும், சுன்னாகம் பிரதேச சபை முன்றலில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
அமரர் பொ.நாகலிங்கம் 1980ஆம் ஆண்டு உயிரிழந்திருந்திருந்தார். அவருக்கு 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சிலை திறக்கப்பட்டிருக்கின்றது. அவரின் சேவையை மதிப்பளித்து அதற்கு நன்றிகூறும் வகையில் இந்தச் சிலையைத் திறந்து வைத்தமைக்கு பாராட்டுக்கள். இன்று சிலர் செய்த உதவிகளை உடனேயே மறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் உதவி செய்பவர்களை தூற்றுகின்றனர்.
நிகழ்வின் தலைவர் குறிப்பிட்டதைப்போல, சிலை வைப்பதென்பது அவரின் சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் எதிர்காலத்தில் மற்றையவர்களும் அவரைப்போல சேவை செய்யவேண்டும் என்பதற்காகவும்தான். அவர், லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்தமையால் அவருக்கு இங்கு பல அபிவிருத்திகளைச் செய்யக் கூடியதாக இருந்தது. அத்துடன் அவரிடம் தலைமைத்துவப் பண்பும் இருந்தமையால் இந்தப் பிரதேசத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது என்றார்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், உடுவில் பிரதேச செயலர் பா.ஜெயகரன், சுன்னாகம் பிரதேச சபைச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.