அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும்

அரசாங்கம் அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்ளுக்கு  கை காட்டிவிட்டு சென்றாலும் புதிய ஜனநாயக முன்னணி குழுவினர் அரச ஊழியர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை.

அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் மாலை பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெரும்பான்மை இல்லாத நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் தெரிவாகி உள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த தேர்தல் இடம்பெறுகிறது.

அதனால் இந்த தேர்தலில் வெற்றிபெறுவது கஷ்டம் என நாங்கள் நினைக்கக்கூடாது அரசாங்கத்தை பெற்றுக்கொள்ள நாங்கள் முயற்சிப்போம். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்க்கட்சியில் நாங்கள் பலமான இடத்துக்கு வரவேண்டும்.

சிலவேளைகளில் அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் அது தொடர்பாகவும் மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் முன்னுக்கு வந்திருக்கிறோம்.

நாடு வீழ்ச்சியடைந்திருந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்னுடன் முன்வந்தவ குழுவே தற்போது சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறது.

எமது குழுவின் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு அனைவரும் கலந்து இருந்ததாலே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமாகியது.

இந்த வருடம் இறுதிவரைக்கும் பேதுமானளவு நிதி வழங்கிய பின்னரே நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைத்தோம். வெளிநாட்டு கையிருப்பு இருக்கிறது.

தற்போது அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மாத்திரமே அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அதனை செய்துகொள்ள முடியுமாகுமா என எனக்கு தெரியாது. அனுபவமுள்ள அணியொன்று இருந்தால் அரசாங்கத்தை சரியான திசைக்கு செலுத்த முடியும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அதிகாரிகளின் அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்ததை நான் கண்டேன்.

மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் காலத்தில் வழங்கி பொய் வாக்குறுதி எனவும்  அவர் தெரிவித்திருந்தார். அமைச்சரவை செயற்படுவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவை என பிரதமர் தெரிவிக்கிறார்.

அரசியலமைப்பு தொடர்பில் இவர் எங்கு கற்றுக்கொண்டார்? அரசியலமைப்பில் 43ஆவது உறுப்புரையை பாருங்கள். நாட்டை நிர்வகிப்பது அமைச்சரவையாகும்.

பிரதமருக்கு அரசியலமைப்பு தொடர்பில் தெரிந்துகொள்ள தேவை என்றால்  சொல்லுங்கள் நான் வருகிறேன். இல்லாவிட்டால் முன்னாள் பிரதமர் வருவார்.

அமைச்சர்களின் வேலை நடவடிக்கைகளை அதிகாரிகளுக்கு வழங்கப்போகிறார்கள். இவ்வாறான குழுவுக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியுமா? அனுபவமுள்ளவர்கள் இருக்க வேண்டும்.

நான் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சராகவும் தினேஷ் குணவர்த்தன பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சராகவும் கடந்த மே மாதம் 27ஆம் திகதி நாங்கள் எடுத்த தீர்மானத்துக்கமைய அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக எனது செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடந்த ஜூலை 11ஆம் திகதி விசேட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தார்.

என்றாலும் அந்த சம்பள அதிகரிப்பை வழங்க பணம் இல்லை என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார். நான் பொய் சொல்லி இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அரச ஊழியர்களின் ஆரம்ப பிரிவின் மாதாந்த அடிப்படைச் சம்பளம் 30ஆயிரம் ரூபாவாகக் கொண்டு, அரச சேவையின் நிவைவேற்று குழு, உயர் சேவை குழு, அமைச்சரவை செயலாளர் ஆகிய பதவிகளுக்கிடையில் 1:6 விகிதாசாரங்களுக்கு அமைவாக ஒட்டுமொத்த அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அளவு திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இரண்டு கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இருப்பவர்கள் அரச திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஓய்வு பெற்ற அரச சேவை பணிப்பாளர்கள் மற்றும் தற்போதும் சேவையில் இருப்பவர்களாகும்.

இந்த குழுவில் இருக்கும் ஒருவர் தற்போது ஜனாதிபதியின் ஆலாேசகராக இருக்கிறார். இவர்கள் அனைவரும் சம்பள அதிகரிப்பு அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதமருக்கு தெரியுமா? அப்படியானால் இந்த விடயத்தை அரசாங்கம் பொய் என எவ்வாறு தெரிவிக்க முடியும்.

திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருடன் இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம்.

அதனால் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட பணத்தை அரச அதிகாரிகளுக்கு செலுத்த முடியும். இவர்களுக்கு கண்டுபிடிக்க முடியாத வகையில் பொய் சொல்ல தெரியாது.

பணம் இருக்கிறது. தேடிக்கொள்ளவும் முடியும். அதன் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அத்துடன் நான் ஒன்றை சொன்னால் நிச்சயமாக அதனை செய்வேன் திசை காட்டியை போன்று செயற்பட மாட்டேன். அதனால் எமது அணி மீது நம்பிக்கை வையுங்கள்.

எங்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு அன்று இவர்கள் அரச ஊழியர்களுக்கு கூறினர். அதன்படி அவர்களும் வாக்களித்தனர்.

இப்போது திசைகாட்டி அரச ஊழியர்களுக்கு டாடா காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்களால் தீர்மானிக்கப்பட்ட இந்த சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் இணங்கும் வரையில் நாங்கள் எதிர்ப்பை முன்னெடுப்போம்.

இந்த சம்பள அதிகரிப்பை கோரிய தொழிற்சங்கங்கள் எங்கே? இவர்களில் அதிகமானவர்கள் தற்போது அரசாங்கத்துடனே இருக்கின்றனர். இந்த தொழிற்சங்கங்கள் அரச ஊழியர்களை காட்டிக்கொடுத்துள்ளன.

அரச ஊழியர்களுக்காக தற்போது குரல்கொடுப்பது சிலிண்டரில் போட்டியிடுபவர்கள் மாத்திரமாகும். ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் கதைத்து பயன் இல்லை.

அநுவுடன் மோதப்போவதில்லை என சஜித் தெரிவித்திருக்கிறார். உண்மையான அநுரகுமார இருக்கும் போது எதற்கு கார்ட்போர்ட் அநுரகுமாரவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்கிறேன் என்றார்.