அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளை தீர்மானிக்க வேண்டும் என யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்தொடர்பான யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார்கள் அந த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
புதிய மாற்றத்தை வேண்டி தமிழ் மக்களே தமிழ் அரசியல் கட்சிகளே, நாம் ஓர் இனமாக வரலாற்றுப் பெரும் பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் நிற்கிறோம். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னணியில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல், தமிழ் மக்கள் மத்தியில் பெருமாற்றத்திற்கான எதிர்பார்ப்புகளை தூண்டியிருக்கிறன.
சமகால அரசியல் கட்சிகளின் உடைவுப் போக்குகள், உட்கட்சிக் குழப்பங்கள் தீர்க்கமான அரசியல் தெளிவற்ற தன்மை போன்ற பல காரணிகளால் தமிழ் மக்களிடையே குழப்பங்களும் வேதனையும் நீடிக்கின்றன. இந்நிலை தொடருமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கணிசமான அளவு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தக்கவைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
‘அனுர’ எனும் அலையைத் தொடர்ந்து ‘மாற்றம்’ என்பது மந்திரச்சொல்லாக பலராலும் உச்சரிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. எனவே இந்த வரலாற்றுத் திருப்புமுனையில் நின்றுகொண்டு புதிய வியுகங்களை வகுக்க வேண்டியது எமது தார்மீக வரலாற்று கடமையாக உள்ளது. வரலாற்று சறுக்கலை மீண்டும் ஒருமுறை நிகழவிடாது எமது அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளை தீர்மானிக்க வேண்டும்.
எம்மிடையே இருக்கும் பிளவுகள், வேற்றுமைகள், சாதி, சமய, பிரதேசவாதங்களை தாண்டி நகரவேண்டிய இடத்தில் வரலாறு எம்மை தற்போது நிறுத்தியுள்ளது. குறிப்பாக பாரம்பரிய அரசியல் பிரதிநிதிகள் புதிய அரசியல் போக்குக்கு இடம்விட்டு நகர்ந்து அர்ப்பணிப்புள்ள நேர்மையான ஊழலற்ற இளையோர்களை உள்வாங்கி வழிநடத்துவது பெரும் மாற்றம் ஒன்றிற்கான சிறந்த முன்மொழிவாக இருக்கும்.
மைய்யரோட்டு அரசியலை தாண்டி கிராமமட்ட சமூக அமைப்புக்களின் கருத்துக்களை உள்வாங்கி வேட்பாளர்களை தெரிந்தெடுப்பது மிகச்சிறந்த நகர்வாக இருக்குமென்பதுடன், பால்நிலை சமத்துவம், பெண்பிரதிநிதிதுவம் குறித்தும் கருத்தில் எடுக்கவேண்டியதும்
அவசியமாகும். செல்திசை தெரியாது தடுமாறும் அவலநிலையில் உள்ள தமிழ் இனத்திற்கு சரியான திசைகளைக் காட்டுவது எமது வரலாற்று கடமையென்பதை உணர்ந்துகொள்ளுவோம்.
தூரநோக்கற்ற அரசியற் குழப்பங்களால் எமது பாராளுமன்ற பிரதிநிதிதுவத்தை இழந்துபோகக்கூடிய ஆபத்து அண்மித்துள்ள இவ்வேளையில் ஊழலற்ற நேர்மையான அரசியல் போக்கு குறித்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு ‘புதிய மாற்றத்தை’ வேண்டி நிற்கின்றது.
நேர்மையான அரசியல் தெளிவு மிக்க ஒரு புதிய அரசியல் நகர்வை மேற்கொண்டு ஒரு தேசிய இனமாக எழுந்து நின்றால் மட்டுமே தமிழ் இனம் தன் இருப்பின் உரிமைகளுக்கான பேரம் பேசும் சக்தியாக எழுந்து நிற்க முடியும் என்பதையும் பேரன்போடு வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.