அரச நிறுவனங்களுக்கு இடையிலான மோதல்களால் அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாகின்றன

சீன அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக  எழுமடுவ மற்றும் மஸ்மடுவ காணிகளின் உரிமை தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையிலான இழுபறியை உடனடியாக நிறுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இரு தரப்பு அதிகாரிகளிடமும் சனிக்கிழமை (28) பணிப்புரை விடுத்தார்.

இவ்விடயம் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடி புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வர வேண்டுமென அமைச்சர் அங்கு வலியுறுத்தினார்.

அப்போது இரு நிறுவனங்களும் தங்கள் மீது நம்பிக்கை வைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எழுமடுவ மற்றும் மஸ்மடுவ காணிகளின் உரிமை கொழும்பு மாநகர சபைக்கே இருந்தது.

ஆனால் வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரண்டு காணிகளும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2019 இல் தமது நிறுவனத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டது. அது நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 50 இன் படியாகும்.

இதற்கு எதிராக கொழும்பு மாநகர சபை சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது.

அங்கு, இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள் என்பதால், சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என, நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. குறித்த வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறும் சீன அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

குறித்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதற்காக சனிக்கிழமை (28) பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க அவர்களின் பங்களிப்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரச நிறுவனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக அபிவிருத்தி திட்டங்கள் மிகவும் தாமதமாகி வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு குறிப்பிட்டார். இவ்வாறான கருத்து முரண்பாடுகளினால் சில சமயங்களில் அபிவிருத்தி திட்டங்கள் நாட்டுக்கு இழக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது அரசியல் அதிகாரத்தின் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அநீதியாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்காக செயல்படுகின்றன. எனவே, சட்டங்கள், கட்டளைகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

சீன அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் 1996 வீடுகள் கட்டப்படும். அதற்காக சீன மக்கள் குடியரசு 552 மில்லியன் யுவான் நிதி உதவி வழங்க உள்ளது. கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான மஸ்மடுவ மற்றும் எழுமடுவ காணிகளில் சுமார் 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. காணியின் உரிமை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் கொழும்பு மாநகர சபைக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் கைவினை கலைஞர்களுக்கு 1996 வீடுகளில் 108 வீடுகள் ஒதுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பழத்துருவத்த பகுதியில் வீடு நிர்மாணிக்கப்பட உள்ளது.

நிர்மாணிக்கப்படும் 1996 வீடுகளில் இந்நாட்டின்  கலைஞர்களுக்கு  108 வீடுகள் ஒதுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பழத்துருவத்த பகுதியில் வீடு நிர்மாணிக்கப்பட உள்ளது.

பேலியகொட, தெமட்டகொட, மஹரகம மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களில் ஏனைய வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இங்கு இத்திட்டத்திற்காக செலவிடப்படும் வரிப்பணம், காணி சுவீகரிப்புக்கான செலவு, காணி அபிவிருத்திக்கான செலவு, வடிவமைப்பு வேலைக்கான செலவு மற்றும் அடிப்படை விலைப்பட்டியல் தயாரிப்பதற்கான செலவு, டெண்டர் வேலைக்கான செலவு மற்றும் கழிவுநீர் வசதிகளின் செலவு என்பன இலங்கை அரசினால் ஏற்றுக் கொள்ளப்படும்.

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் “Belt and Road Initiative ” (BRI) மாநாட்டின் போது வீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று நகர அபிவிருத்தி  மற்றும் வீடமைப்பு அமைச்சு கூறியது.