இன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் சார்பாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சியினுடைய நிலைப்பாடானது இணைந்த வடகிழக்கிலே சமஸ்தி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறை ஏற்படுத்தப்படுவதாகும்.
இதுவே எங்களுடைய அரசியல் நிலைப்பாடு. இதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் யாராவது இணங்கி வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் கூட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் இது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை.
எமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாம் கூறி இருப்பதானது, அவர்களுடைய அரசியல் அறிக்கையில் எவ்வாறான செய்தியை சொல்கிறீர்கள் என்று நாம் பார்க்கப் போகின்றோம்.
இது தொடர்பில் முழு நாட்டிற்கும் அவர்கள் எண்ணத்தை சொல்ல வருகிறார்கள் என்பது தொடர்பிலும் நாங்கள் பார்க்க இருக்கிறோம்.
எமது கோரிக்கைகளை ஏற்றால் அது தொடர்பில் விசேஷமாக சிங்கள மக்களுக்கு அவர்கள் தமிழர்களுக்கு எதைச் செய்யப் போகிறோம் என்பதையும் அறிவிக்க வேண்டும்.
இது தவிர நாங்களும் எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து வடிவில் தெளிவான ஒரு அறிக்கையாக வெளியிடுவோம். எங்களுடைய மக்களுக்கு மக்களுடைய அரசியல் தலைமைத்துவம் வழங்குகின்ற கட்சி என்ற நிலைபாட்டில் அவ்வாறான ஒரு பொறுப்பை நாமும் உதாசீனம் செய்யாமல் வழிகாட்டல் அறிக்கை ஒன்றை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிடுவோம்.
அரியநேந்திரன் தொடர்பில்
தமிழ் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது என்று சில அரசியல் கட்சிகளும் சில சிவில் அமைப்புகள் என்று சொல்லுபவர்களும் செயற்படுகின்றனர்.
அதுவும் இன்றைய கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது. இதற்கு முன்னரே இரண்டு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம். கடந்த கூட்டத்தில் அரியநேந்திரன் சமூகமாகி இருந்தார். அந்த கூட்டங்களிலேயே நாங்கள் இப்போது இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில்லை என சொல்லியிருந்தோம். எங்களுடைய மக்களோடும் எங்களுடைய கட்சி உறுப்பினர்களோடும் தொடர்ந்து கலந்துரையாடுவது அவசியம் என்று கலந்துரையாடப்பட்டிருக்கிறது. எனினும் நாம் இதற்கு ஆதரவா எதிர்ப்பா என்று ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை.
ஆனால் இலங்கை தமிழரசு கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரிடம் விளக்கம் கூறுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரைக்கும் கட்சி நிகழ்வுகள் எதிலும் அவருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.