இதுவரைக் காலமும் அரசியல்வாதிகளை வாழவைக்க வாக்களித்தீர்கள். அந்த நிலைமை மாறி இம்முறையாவது மக்களை வாழவைக்கக்கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என ஜனநாயக தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் எனக்கு அதிக விருப்புவாக்கை வழங்கியிருந்தனர். அப்போதே நான் தான் அதிகூடிய நிதியை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கு கொண்டுவர வேண்டும் என சபதம் எடுத்தேன். அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளேன்.
எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கிடைத்த பதவி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர். அந்தப் பதவி மூலமாக 2020-2022 காலப் பகுதிக்குள் அதிக அபிவிருத்திகளைச் செய்திருந்தேன்.
மறுபடியும் இவ்வாறான அபிவிருத்திகளை இரட்டிப்பாக செய்ய மக்களது ஆணை தேவை.
நான் மக்களிடம் கேட்பது… இதுவரை அரசியல்வாதிகளை வாழ வைப்பதற்காக வாக்களித்தீர்கள். இம்முறையாவது உங்களை வாழவைக்கக்கூடியவர்களுக்கு வாக்களியுங்கள்.
பாராளுமன்ற உறுப்பினராகவே மரணிக்க வேண்டும் என பலர் ஆசைப்படுகின்றனர். இம்முறையும் அவ்வாறானவர்கள் போட்டியிடுகின்றனர்.
மக்கள் அவர்களை இனங்கண்டுகொள்ள வேண்டும். இம்முறையாவது உங்களை வாழ வைக்கக்கூடியவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யுங்கள் என்றார்.