இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகரித்துள்ளது.

அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம், ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியவற்றின் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்திருந்தது.

ஜெர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசிடமிருந்து கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு கொண்டுவரப்பட்டன.

இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக, இலங்கைக்கான ஜேர்மனியின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் (Pierre Tripon) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.