அனர்த்தங்கள், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலமொன்றை உருவாக்கும் நோக்கிலும், சுற்றுச்சுழலை மேம்படுத்துவதுடன் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், ரூபவாஹினியின் அனுசரணையில் இலங்கையில் 9 ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய ஒலிபரப்புச் சங்க மாநாடு நடைபெறவுள்ளதாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் டி சில்வா மேலும் கூறுகையில்,
இம்முறை, ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தில் அனுசரணையில் இலங்கையில் ஆசிய பசுபிக் பிராந்திய ஒலிபரப்புச் சங்க மாநாடு இடம்பெறுகின்றது. அதனடிப்படையில், ஆசிய, பசிபிக் (ABU) ஊடகங்கள் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிகளில் கொழும்பில் ஒன்று கூடவுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி, பல நாடுகள் இதில் பங்கு கொள்கின்றன. இந்த மாநாடு மவுட்லவேனியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
9 ஆவது ஆசிய பசிபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் மாநாட்டினை இம்முறை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளமைக்கு அமைய, இதன் பிரதான அனுசரணையாளராக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் முன்னின்று இம் மாநாட்டினை நடத்துகின்றது.
இம் மாநாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் ஊடக அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் இணைந்த நிறுவனங்கள், சர்வதேச அமைப்புக்கள் பிராந்தியத்தில் உள்ள ஊடக நிறுவனங்கள், சிவில் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 75 பேர் இதில் கலந்து கொள்ளவுள்ளளனர்.
இம்மாநாடு இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து, பிஜி மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் நடைபெற்று இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது.
கடந்த காலங்களில், காலநிலை மாற்றம் மற்றும் சுனாமியினால் இலங்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கையில் வெள்ளப்பெருக்கு, வறட்சி, மண்சரிவு, நில அதிர்வுகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் அனர்த்தங்கள் உள்ளிட்ட விடயங்களை ஊடகவியலாளர் எவ்வாறு பொதுமக்களுக்கு செய்திகளாக கொண்டு செல்ல முடியும் என்பது தொடர்பில் இந்த மாநாட்டில் விரிவாக ஆரயப்படவுள்ளது.
ஜப்பான்(NHK), சீனா(CMG), இந்தியா தூர்தர்ஷன், அவுஸ்திரேலியாவின் (ABC), துருக்கியின்(TRT) மற்றும் மலேசியா(RTM) ஆகிய ஊடக நிறுவனங்கள் உட்பட ஆசிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தேசிய ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
அனர்த்தங்கள், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதன் தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலமொன்றை உருவாக்குவதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும். இந்த மாநாட்டில் பிரதான உரையை பேராசிரியர் மொஹான் முனசிங்க நிகழ்த்தவுள்ளார்.
ஆசிய பசுபிக் பிராந்திய ஒலிபரப்புச் சங்கத்தினால் ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படுவதுடன், 26 ஆம் திகதி இரவு விருது வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டை முன்னிட்டு புதிய இலச்சினை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கடந்த காாலங்களில் இந்த மாநாடு தொடர்பில் பல்வேறு விதங்களில் ஆயத்தங்களை மேற்கொண்டு வந்தோம் அதனடிப்படையில், பாடசாலை மாணவர்களிடையே விவாதப் போட்டி, சித்திரப் போட்டி மற்றும் குறுந் திரைப்படப் போட்டி பேன்றன இடம்பெற்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாநாடு இடம்பெறும் 26 ஆம் திகதியன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இந்த மாநாடு இடம்பெறும் போது ஊடகவியலாளர்களுக்கும் விசேட பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும் மாநாட்டில் சுற்றுச்சூழல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. வெவ்வேறு நாடுகளில் இருந்து வரவுள்ள ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை தென்பகுதிக்கு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கள விஜயத்திற்கு அழைத்துச் செல்வதற்கு 27 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.




