ஊழல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் எதிர்க்கட்சியினர் அச்சமடைந்து அவர் மீது அரசியல் முத்திரை பதிக்க முயற்சிக்கிறார்கள். வேலிக்கு ஓணான் சாட்சி போல ஊழல்வாதிகளுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவாக உள்ளார்கள் .நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
முறையான விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் வெளியாகும் போது ஊழல்வாதிகள் அச்சமடைவதையிட்டு நாங்கள் கலக்கமடைய போவதில்லை. நாட்டில் சட்டவாட்சி முறையாக செயற்படுத்தப்படும் போதும் மோசடியாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள். அரச சேவையாளர்கள் நெருக்கடியுள்ளாகியுள்ளார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். அரச சேவையாளர்கள் சட்டத்தின் பிரகாரம் சிறந்த முறையில் செயற்படுவார்களாயின் எவருக்கும் அச்சமடைய தேவையில்லை. அதனை விடுத்து கடந்த காலங்களை போன்று ஊழல் மோசடியுடன் செயற்பட்டால் அச்சமடைய வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி கடந்த 24 ஆம் திகதி கல்கிசை நீதிமன்றம் என்னையும், அமைச்சர் வசந்த சமரசிங்கவையும், நகர மேயர் ரஞ்சன் ஜயலாலையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.அந்த வழக்கு தொடர்பான ஆவணம் மற்றும் வழக்கு குறிப்பு என்னிடம் உள்ளது. இந்த ஆவணங்களில் எவ்விடத்திலும் எம்மை கைது செய்யுமாறு குறிப்பிடப்படவில்லை. ஏன் அவர் இவ்வாறு குறிப்பிட வேண்டும்.?
ராஜபக்ஷர்கள் சட்டத்தை எவ்வாறு செயற்படுத்தினார்கள், பாராளுமன்றத்துக்கு சட்டத்தரணிகளை அழைத்து வந்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்று நன்கு அறிவோம். ராஜபக்ஷர்கள் அன்று சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டார்கள். இன்று சஜித் பிரேமதாசக்களின் சகாக்கவும் அவ்வாறே செயற்படுகிறார்கள். சுயாதீனமாக செயற்படும் நீதிபதிகளுக்கு அரசியல் முத்திரை குத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க மீது அரசியல் முத்திரை பதிக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். சுயாதீனம் பற்றி பேசுபவர்கள் ரங்க திஸாநாக்கவை புத்தளத்துக்கு இடமாற்றம் செய்ததை மறந்து விட்டார்கள். நீதிமன்றம் சுயாதீனமில்லை, அரசியல் நோக்கத்துடன் செயற்படுகிறது என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
நீதிச்சேவை ஆணைகுழு சுயாதீனமானது. இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியால் கூட கட்டளை பிறப்பிக்க முடியாது. ஊழல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள். வேலிக்கு ஓணான் சாட்சி போல ஊழல்வாதிகளுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவாகவுள்ளார்கள் என்றார்.





