சிறிலங்கா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் 2015ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்புக் குழுவில் அங்கம் வகித்தது ஒன்றும் புதிதல்ல, இரகசியமல்ல. ஜனாதிபதி பலமுறை இதனை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவின் ஒருசில ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த ஆவணங்களை எங்கு கொண்டுசென்றார் என்பது எமக்குத் தெரியாதென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் 2015.01.21ஆம் திகதியன்று சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய ஊழல் எதிர்ப்புக் குழு அலுவலகம் தாபிக்கப்பட்டது.
பிரதமர் அலுவலகத்தின் தாபிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புக் குழு அலுவலகம் சட்டரீதியிலான முறையில் ஸ்தாபிக்கப்படாத நிலையில் அமைச்சரவையால் அவ்வப்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பிரதமர் அலுவலகம் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த குழுவில் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, விஜேதாஸ ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, சம்பந்தன், சுமந்திரன், வெலியமுன, ஜயம்பதி விக்கிரமரத்ன, மலிக் விக்கிரமரத்ன, தம்மிக கங்கனாத், அநுரகுமார திசாநாயக்க, ஆனந்த விஜேபால மற்றும் குழுவின் செயலாளர்கள் ஆகியோர் ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.
ஊழல் எதிர்ப்பு குழு செயலகத்துக்கு 475 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், 687 பொதுவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த குழு தொடர்பான ஆவணங்கள் பிரதமர் செயலகம் வசமில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த சாமர சம்பத், ஊழல் எதிர்ப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகம் பற்றிய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த குழுவின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் அங்கம் வகித்ததை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு எழுந்து பதிலளித்த பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் ஊழல் எதிர்ப்புக் குழுவில் அங்கம் வகித்தது ஒன்றும் புதிதல்ல, ஜனாதிபதி பலமுறை இதனை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவின் ஒருசில ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த ஆவணங்களை எங்கு கொண்டுசென்றார் என்பது எமக்குத் தெரியாது என்றார்.