கசிப்பு போத்தலுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்

சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடுவதற்காக கசிப்பு போத்தலுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (01) பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மாணவன் கசிப்பு போத்தலுடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மாணவனின் உறவினர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் நண்பர்களுடன் இணைந்து சிறுவர் தினத்தைக் கொண்டாடுவதற்காக இரகசியமாக கசிப்பு போத்தலைப் பாடசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவனின் 19 வயதுடைய உறவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.