கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய லொறியொன்றில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு-13 பிரதேசத்தில் வசிக்கும் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து லேபிள்-5 ரக விஸ்கி போத்தல்கள் 99 , ப்ளெக் லேபிள் ரக விஸ்கி போத்தல்கள் 14 மற்றும் வெட்-69 ரக விஸ்கி போத்தல்கள் 05 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் கொண்டு வரும் மதுபான போத்தல்களை விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் வைத்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து, பின்னர் அவற்றை  பல்வேறு பிரதேசங்களில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (05) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.