கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய நபர் கைது

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கினிகத்தேனை பொலிஸாரால் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸாரால் கினிகத்தேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்ட தொலைபேசி இலக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கினிகத்தேனை, கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் எனவும் இவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கண்டி நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, கண்டி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்  நீதிமன்றத்துக்கு வருகை தந்த பொதுமக்களும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.

வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கண்டி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.