தமிழ் இளைஞர்கள் தமது உரிமைகளைக் கோரி ஆயுத வழியில் பயணித்தபோதும் தமிழ் மக்களின் உரிமைக்காக இறுதிவரை அஹிம்சை வழியில் பயணித்து கனவான் அரசியல் செய்த பெரும் தலைவர் மாவை சேனாதிராசா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க புகழாரம் சூட்டினார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் , உறுப்பினர்கள் அமரர் மாவை சேனாதிராசாவின் இழப்புக்கு அனுதாபம் தெரிவித்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரிசாட் பதியூதீன். ரவூப் ஹக்கீம் உட்பட சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், குகதாசன், ஸ்ரீ நேசன் ஆகியோர் அனுதாபம் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற காலம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா, கோசல நுவன் ஜயவீர, டொனால்ட் திசாநாயக்க, சூரியபெரும ஆகியோருக்கான அனுதாப பிரேரணையின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனுதாபம் தெரிவித்தனர்.
எதிர்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக உரையாற்றுகையில், தமிழ் மக்களுக்காக தன்னை இறுதிவரை அர்ப்பணித்தவர் மாவை சேனாதிராஜா.அவர் பிறந்தது முதல் இறக்கும் வரை தனது சொந்த மண்ணிலேயே இருந்தார். அரசியல் செய்தார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் கொழும்பில் வாழ்ந்த போதும் மாவை சேனாதிராஜா தனது சொந்த மண்ணில் தான் வாழ்ந்தார்.தனது மக்களுக்காக பல சாத்விக போராட்டங்களில் அவர் முன்னின்றார். எம்முடன் எப்போதுமே அவருக்கு நல்லுறவு இருந்தது என்றார்.
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரான சிவஞானம் சிறீதரன் உரையாற்றுகையில்,
ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும்இநீடித்த செழுமைமிகு இருப்புக்காகவும் தொலைநோக்கான வழிகாட்டலை வழங்குகின்ற பொறுப்பை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் மக்களையும் கொள்கைப் பற்றுறுதியோடு தீர்க்கமான வழிமுறைகளில் முன்னேற்றிச் சென்ற ஒரு பெருந்தலைவராகவே அவரது மறைவின் பின்னும் மாவை சேனாதிராஜாவுக்கான அடையாளம் மக்கள் மனங்களில் நிலைபெற்றிருக்கிறது.
நாங்கள் ஒரு சுதந்திர அரசியல் இயக்கமாக – மக்கள் திரட்சி நிறைந்த தேசமாக எம்மை உருவாக்கிக் கொள்ளாதவரைஇ பலவீனமான அரசியல் கோரிக்கையாளர்களாகவே இருக்க வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தவராக, தமிழரசுக்கட்சியை மக்கள் பேரியக்கமாக வழிநடத்திச் செல்ல வேண்டுமென்ற நேர்த்திமிகு சிந்தனையில் பின்வாங்காத பெருந்தலைவராக இருந்த எனது அரசியல் வழிகாட்டியும் எமது கட்சியின் மறைந்த பெருந்தலைவருமாகிய மாவை. சேனாதிராஜாவின் தடங்களை இறுகப்பற்றியபடி, சரிந்துபோயிருக்கக் கூடிய தமிழரசின் செயலூக்கத்தினை மீள நிலைநிறுத்துவதற்காக தமிழ்த்தேசிய ஆர்வலர்களோடும் தொண்டர்களோடும் இணைந்து ஒழுகி எமது அரசியல் இயக்கத்தை நிலைநிறுத்துவதன் வழி, ஈழத்தமிழினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தை இதயசுத்தியோடு முன்கொண்டுசெல்ல உழைப்பதுவே அன்னாருக்கான உயரிய அஞ்சலி என்பதை உணர்ந்த ஒருவனாக அத்தகையதோர் மன உறுதியோடு அவரது மறைவுக்கான எனது அஞ்சலிகளையும் அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.