மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாயக்க தெரிவித்தார்.
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்து பிரதேச வாசிகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசென்றதையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (07) காலை காத்தான்குடி கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பிரதேசங்களுக்கு பெருநாள் தொழுகைக்காக சென்ற அதிகமான இளைஞர்கள் தலைக்கவசம் அணியாது சென்றுள்ளனர்.
தலைக்கவசம் அணியாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற அறிவித்தலை பொலிஸார் முன்பே அறிவித்த போதிலும் அவற்றை உதாசீனம் செய்து தலைக்கவசம் அணியாது பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைக்கவசம் அணியாத மோட்டார் சைக்கிள் செலுத்தக்கூடிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை (06) காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தலைக்கவசம் அணியாது கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.