தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து அந்த நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்விக்குள்ளாக்கி வந்தனர். அவர் யுக்திய திட்டத்தை நடைமுறைப்படுத்தியமையே இதற்கு காரணமாகும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சியானது ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் அரசாங்கமும் நீதிமன்றத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்குவதற்கு முயற்சிகளை முன்னெடுப்பதாக ஒரு நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறது.
ஜனாதிபதியே 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிமன்றத்தை சுயாதீனமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அமைச்சரவையும் அரசாங்கமும் அதற்கு மதிப்பளிக்கின்றது.
அதேவேளை, உயர் நீதிமன்றம் நேற்று (நேற்று முன்தினம்) மூன்று இடைக்கால தடை யுத்தரவுகளை பிறப்பித்திருந்தது. தேவையானால் அதில் தலையிட்டு அதனை அரசாங்கத்தினால் நிறுத்தியிருக்க முடியும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான வர்த்தமானி மற்றும் உள்ளூராட்சி சபை நியமனங்கள் சம்பந்தமாகவும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் எதிர்க்கட்சி, பொலிஸ் மா அதிபர் தொடர்பில் மட்டுமே கதைக்கிறது.இந்த தடையுத்தரவு தொடர்பில் அதிகம் மகிழ்ச்சியடைவது பாதாள உலக குழுவினராகும். ஏனெனில் பாதாள உலகக் குழுவே எதிர்க்கட்சிக்கு பாதுகாப்பு வழங்குகிறது. அதனால்தான் இந்த விடயத்தில் எதிர்க்கட்சி இந்தளவு முக்கியத்துவத்தை வழங்குகிறது. இல்லாவிட்டால் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் மட்டும் குரல் எழுப்பும் எதிர்க்கட்சி ஏனைய இரண்டு தடை உத்தரவுகள் தொடர்பில் கதைத்திருப்பார்கள்.
யுக்திய வேலைத் திட்டத்தின் மூலம் பாதாள உலகக் குழுவை அளிக்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகிறது என்பதால் எதிர்க்கட்சியினர் தம்மை பாதுகாக்கும் பாதாள உலகக் குழுவின் ஒழிப்பை பொறுத்துக் கொள்ள முடியாததால்தான் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல்களை உருவாக்குகின்றனர் என்றார்.