நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வெள்ளிக்கிழமை (06) நேரில் சென்று பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநரை வியாழக்கிழமை (05) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை இயக்குமாறு கோரியிருந்தனர்.
இதன் பின்னர் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்திலுள்ள செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலும் ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும், ஆளுநரை வைத்தியசாலையை வந்து நேரில் பார்வையிடுமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற ஆளுநரை, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெயராணி பரமோதயன் மற்றும் மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வீரவத்த ஆகியோர் வரவேற்றனர்.
இதன் பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை ஆளுநர் பார்வையிட்டார்.
அங்கு கிளினிக் செயற்பாடுகள் நடைபெறுவதை பார்வையிட்டதுடன், பயன்படுத்தப்படாத நிலையிலுள்ள ஏனைய சிகிச்சை நிலையங்களையும் ஆளுநர் நேரடியாகப் பார்வையிட்டார்.
இதற்கான ஆளணி இன்னமும் அனுமதிக்கப்படாத நிலையில் அதனைப் பெற்று விரைவாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.