குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நேரடி நடவடிக்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிகட்டுவான் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (29)  மேற்கொண்டிருந்தார்.

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரித்து வைக்கும் பகுதியில் காணப்பட்ட இட  நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை  மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி  உறுதிப்படுத்துவதற்காக இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிக்கட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற படகுகளை தரிப்பதற்கு ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படாமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

குறிப்பாக, மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மாத்திரம் பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடுகின்ற நெடுந்தீவு மக்களும் அரச  ஊழியர்களும் பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறிகட்டுவானுக்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று (29)  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவு மற்றும் நயினாதீவு பயணிகள்  படகு சேவை உரிமையாளர்கள், கடற்படை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து கலந்துரையாடியதை தொடர்ந்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.