கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் : திடுக்கிடும் தகவல்கள்

ஊவா மாகாணம்  மொனராகலை மாவட்டத்தின் தனமன்வில பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் அப்பகுதியை அதிர வைத்துள்ளது. 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 22 மாணவர்கள் கூட்டாக  பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து சந்தேக நபர்களிடமும் பெற்றோரிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முன்பதாக குறித்த மாணவிக்கு மதுபானம் அருந்த வைத்துள்ளதாக மாணவியிடம் பெற்ற ஆரம்பகட்ட  வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பாடசாலையில் கற்கும் சக மாணவனை காதலித்து வந்துள்ள மாணவியை மாணவன் தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அங்கு சென்றதும்  மாணவிக்கு வலுக்கட்டாயமாக குறித்த மாணவன் மதுவை பருகச்செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த ஏனைய மாணவர்கள் கூட்டாக இணைந்து மேற்படி மாணவியை கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். அதன் பிறகு குறித்த மாணவியை மிரட்டிய மாணவர்கள் இதை வேறு எவரிடமும் கூறினால் நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்திருக்கின்றோம் என்றும் அதை அனைவரும் காட்டி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பின்னர் பல தடவைகள் இதை காட்டியே மேற்படி  மாணவர்கள் இந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்ற விடயம் வெளிவந்துள்ளது.

மாணவியின் காதலன் என்று கூறப்படும் அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒரு வருட காலமாக மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

மாணவனின் வீட்டில்  தான்  துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் பின்னர்  தன்னை குறித்த மாணவர்களில் ஏழு பேர்  கிரிந்தி ஓயா ஆற்றுக்கு அழைத்துச்சென்று அங்கேயும் துஷ்பிரயோகம் செய்ததாகவம் அந்த சம்பவத்தையும் மாணவர்கள் வீடியோ பதிவு செய்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது மாணவி தெரிவித்துள்ளார்.

மாணவியின் காதலன் என்று கூறப்படும் மாணவனின் தாயார் ஒரு ஆசிரியையாவார். தந்தை தனமன்வில கல்வி வலயத்தில்  கற்பித்தல் பயிற்றுவிப்பாளராக இருக்கின்றார் என்ற விடயங்கள் தெரிய வந்துள்ளன. எனினும் சம்பவம் குறித்து அறிந்திருந்தாலும் குறித்த பாடசாலை நிர்வாகம் இதை மறைத்துள்ளமையும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. தமது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் வந்து விடக்கூடாது என பாடசாலை அதிபர் மற்றும் ஒழுக்காற்று குழுவினர் இதை விசாரணை  செய்யவில்லை. மேலும் சட்ட நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக  கல்லூரி அதிபர் மாணவர்கள் பெற்றோர்களிடம் கடிதங்களைப் பெற்றுள்ளதாகவும் தனமன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், இந்த கொடூரமான சம்பவம் குறித்து தனமன்வில பிரதேச மக்கள் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த மாணவியின் மீது குற்றம் புரிந்த மாணவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.