சங்குக்கு தமிழ் மக்கள் திரண்டு வந்து வாக்களியுங்கள்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெறவிருக்கும் நிலையில், புதன்கிழமை (18) நள்ளிரவுடன் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை (18) கொழும்பிலுள்ள வெஸ்டேர்ன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாம் எதிர்பார்த்ததை விடவும் தற்போது தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. எமது நாட்டில் பாராளுமன்றத்தேர்தல், மாகாணசபைத்தேர்தல், உள்ளுராட்சிமன்றத்தேர்தல் ஆகியவற்றில் அந்தந்தப் பகுதிகளைச்சேர்ந்த மக்களின் தெரிவுகளுக்கே இடமளிக்கப்படும். ஆனால் ஜனாதிபதித்தேர்தலில் மாத்திரமே ஒட்டுமொத்த நாட்டுமக்களும் ஒரே தளத்தில் பங்கேற்பர்.

இதுவரையில் ஆட்சிபீடமேறிய சிங்கள பௌத்த அரசாங்கங்கள் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டுவருகின்றன. குறிப்பாக குச்சவெளியில் 431 ஏக்கர் நிலப்பரப்பு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதன் விளைவாக வட, கிழக்கில் தமிழ் மக்களின் நிலத்தொடர்ச்சி அற்றுப்போயிருக்கிறது.

இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இன ரீதியாகப் பிரச்சினைகள் கட்டவிழ்த்துவிடப்படும்போது நாமும் அதனை முறியடிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் எமது பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்குச் சொல்லும் நோக்கிலும், வட, கிழக்கில் தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கிலும் இம்முறை தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கும் அரியநேத்திரனுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்றார்.

அதேவேளை இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட புவிதரன், உண்மையிலேயே கடந்த 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதுடன் தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதாகவும், எனவே 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அப்போது பொதுவேட்பாளர் களமிறக்கப்படாத நிலையில், தற்போதேனும் அதற்குரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும், ஆகவே தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்துக்குக் கூறுவதற்கு பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களிக்கவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோன்று சமகாலத்தில் தமிழ் மக்களைப் பிளவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அவற்றைத் தோற்கடித்து தமிழ் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காகவே பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சசிகலா ரவிராஜ் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை செயலாளர் மிதிலைச்செல்வி, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வெல்லும் நோக்கில் தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டதுடன், அவ்வேட்பாளர் தமிழ் மக்களின் ஒற்றுமையின் ஊடாக எதிர்பார்க்கப்படும் வாக்குகளைப் பெறுவார் எனவும், அவ்வாறு பெறாவிட்டாலும் அடுத்தடுத்த ஜனாதிபதித்தேர்தல்களிலும் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்படும் எனவும் தெரிவித்தார்.