சட்டசிக்கல் இருப்பதாகக் காண்பித்து குழப்பம் ஏற்படுத்த ரணில் முயற்சிக்கிறார் !

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கவுள்ள நிலையில், தானே பதில் பொலிஸ்மா அதிபரொருவரைத் தெரிவுசெய்து நியமிப்பது தவறென்று கருதுவாராயின், அவர் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் அந்தப் பொறுப்பைக் கையளித்து, அவர்கள் ஒன்றிணைந்து சிபாரிசு செய்யும் நபரின் பெயரை அரசியலமைப்புப்பேரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கலாம். எனவே இது தீர்க்கப்படமுடியாத பிரச்சினை அல்ல என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவிதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் பல்வேறு சட்ட முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருக்கும் சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

அரசியலமைப்புப்பேரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அப்பதவியில் வெற்றிடம் ஏற்படாததன் காரணமாக பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கமுடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அது முற்றிலும் தவறான கூற்றாகும். ஏனெனில் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவானது, இவ்விடயத்தில் அரசியலமைப்புப்பேரவை மேற்கொண்ட தீர்மானம் தவறு என்ற தர்க்கத்தை அடிப்படையாகக்கொண்டதாகும்.

எனவே பிரதமர் இதனை அறிந்துகொண்டிருந்தால், அத்தகைய கூற்றை வெளியிட்டிருக்கமாட்டார். ஆகவே தற்போது பொலிஸ்மா அதிபர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வெற்றிடத்துக்குப் பதில் பொலிஸ்மா அதிபரொருவர் நியமிக்கப்படவேண்டும் என உயர்நீதிமன்றமே கட்டளையும் பிறப்பித்திருக்கின்றது.

அதேபோன்று ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கவுள்ள நிலையில், தானே பதில் பொலிஸ்மா அதிபரொருவரைத் தெரிவுசெய்து நியமிப்பது தவறென்று கருதுவாராயின், அவர் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் அந்தப் பொறுப்பைக் கையளித்து, அவர்கள் ஒன்றிணைந்து சிபாரிசு செய்யும் நபரின் பெயரை அரசியலமைப்புப்பேரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கலாம். ஆகவே இது தீர்க்கப்படமுடியாத பிரச்சினை அல்ல.

எனவே இவ்விடயத்தில் சட்டச்சிக்கல் இருப்பதாகக் காண்பித்து, ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதியும், பிரதமரும் திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனாதிபதித்தேர்தலை நடாத்தாமல் தாமதிப்பதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய தடைகள் எவையும் அரசியலமைப்பில் இல்லை.

இருப்பினும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கு அவசியமான நிதியை விடுவிக்காமல் நிதியமைச்சர் தடுத்ததைப்போன்று, இம்முறையும் ஜனாதிபதித்தேர்தலுக்கு அவசியமான நிதியை நிதியமைச்சர் தடுத்தால் மாத்திரமே தேர்தல் தடைப்படும். இருப்பினும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விட மிகமோசமான நிலையே அவருக்கு ஏற்படும் என்றார்.