சட்டவிரோதமாக குளம் அமைக்க தனிநபர் ஒருவர் முயற்சி : வவுனியாவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம் பீகிடியா பாம் கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை (12) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

செட்டிக்குளம் பீகிடியா பாம் கிராமத்தில் தனி நபரொருவர் சட்டவிரோதமாக குளம்  அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

தனிநபர் ஒருவர் எந்தவித அனுமதியுமின்றி புதிதாக அணைக்கட்டு போடப்பட்டு குளம் அமைப்பதனால் அதற்கு கீழ் வாழுகின்ற 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் குளக்கட்டு உடைப்பெடுக்குமாயின் தமது வீடுகள் வெள்ளநீரில் மூழ்கிவிடும் எனவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு, வயல்களே இல்லாத இடத்தில் இந்தவித பொறிமுறையும்  இன்றி குளக்கட்டு அமைப்பதனால் இதற்கு அருகாமையிலுள்ள பிரதேச மக்களின் வாழ்வு கேள்ளவிக்குறியாகியுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த அப்பிரதேசத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இது வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணி எனவே பிரதேச செயலகம் வனவள திணைக்களத்தோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.