சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே நீர் கட்டண அதிகரிப்பு

நீர்கட்டணத்தை அதிகரித்துள்ளதன் மூலம் அரசாஙகம்  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மீண்டும்  கஷ்டத்துகுள்ளாக்கி இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் செயலாளர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்லும் நிலையில் அரசாங்கம் தற்போது நீர் கட்டணத்தை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இது கஷ்டப்படும் மக்கள் மீது சுமத்தியிருக்கும் பாரிய சுமையாகும். புதிய நீர் கட்டணத்தின் பிரகாரம் முதல் 5அலகுகளுக்கு இதவரை அறவிடப்பட்ட 20 ரூபா தற்போது ஒரு அலக்குக்கு 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று மாதக்கட்டணத்தை 15 அலகுகள் வரை 300 ரூபாவாக அதிகரித்திருக்கிறது.

சாதாரண வீட்டுப்பாவனையாளர்கள் மாதத்துக்கு 15அலகுகள் வரையே நீர் பாவிக்கின்றனர். நீர் பானையாளர்களில் நூற்றுக்கு 62வீதமானவர்கள் மாதத்துக்கு 15 அலகுகள் பாவிப்பவர்களாகும். இவர்களின் கட்டணம் அதிகரித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதாரண மக்களின்  கஷ்டம் தொடர்பில் எந்த உணர்வும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்த்தின் பிரகாரம் அரசாங்கம் அனைத்து வகையான கட்டண அதிகரிப்புகளை மேற்கொள்ளும் அதில் சந்தேகம் இல்லை. அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க எந்த திட்டமும் இல்லை.

எனவே மக்கள் பொருளாதார ரீதியில் கஷ்டத்துடன் வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் நிலையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.