சாராயக் கம்பனிகளிடமிருந்து நிதிபெறுவோர் நிதியமைச்சில் உள்ளனர்!

சாராய கம்பனிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் ஓரிரு நபர்கள் நிதி அமைச்சில் இருக்கின்றனர். அவர்களின் பெயர் விபரங்களை ஒரு சில தினங்களில் வெளிப்படுத்துவேனென கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், நளின் பணடார மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவிக்கையில், சீனி உற்பத்தி சாலைகளின் நட்டத்தை போக்கிக்கொள்வதற்காக 475 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் எத்தனோலை 800 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.இதனால் பல இடைப் பிரச்சினைகள் தோன்றுகின்றன.

குறிப்பாக எத்தனோல் விலையை அந்தளவு அதிகரிக்கும்போது சந்தையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படும். அவ்வாறு அதிகரிக்கப்படும்போது அதற்கு நிகராக நிச்சயமாக கசிப்பு உற்பத்தியும் அதிகரிக்கப்படும். கசிப்பு உற்பத்தி அதிகரிக்கப்பட்டால், அரசாங்கத்துக்கு கிடைக்கும் சுங்கவரி வருமானம் குறைவடையும். இதனால் எமது வருமான இலக்கை அடைந்துகொள்ள முடியாமல் போகிறது.

அதனால் இந்த ஆபத்தான நிலைமையை புரிந்துகொண்டே எத்தனோல் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். அதேநேரம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, நிதி அமைச்சுடன் சம்பந்தப்பட்டு, வருமான இலக்கை அடைந்துகொள்ள இருக்கும் பிரச்சினை தொடர்பில் புரிந்துகொண்டு இந்த விடயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், எத்தனோல் ஒரு லீட்டர் 1500 ருபாவுக்கு இருக்கும்போதும் சாராயம் ஒரு போத்தல் 3500, 4000ஆயிரம் ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட்டது. தற்போது எத்தனோல் ஒரு லீட்டர் 475ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்போது சாராயம் போத்தலின் விலை குறையவில்லை.

எத்தனோல் ஒரு லீட்டரில் 3 சாராய போத்தல்கள் உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால் சாராயம் ஒரு போத்தல் எந்தளவு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அதனால் எத்தனோல் விலையை 475 ரூபாவில் இருந்து 800 ரூபாவரை அதிகரிப்பதால், சாராயம் உற்பத்தியாளர்களுக்கு எந்த பிரச்சினையும் எற்படப்போவதில்லை.

அத்துடன் கசிப்பு அருந்துபவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் லீட்டர் பயன்படுத்துகின்றனர்.இதனை நிறுத்துவதற்கே சீனி உற்பத்தி செய்கின்ற நிலையங்களுக்கு அனுமதிபத்திரம் வழங்கி, குறைந்த விலைக்கு சாராயம் போத்தல் ஒன்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தேன்.

இந்த விடயத்தில் ஒரு பிரச்சினை இருக்கிறது. இதுதொடர்பில் நான் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை வழங்குவேன். நிதி அமைச்சில் இருப்பவர்களில் சாராய கம்பனிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் ஓரிரு நபர்கள் இருக்கின்றனர்.அவர்களின் பெயர் விபரங்களை ஒருசில தினங்களில் வெளிப்படுத்துவேன். அவர்களே இந்த விடயங்களை தடுத்துவருகின்றனர்.

அதனால் இதனை சரிசெய்யவேண்டும். இல்லாவிட்டால் இந்த தொழிற்சாலையை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாமல் போகும். அதனால் எத்தனோல் விலையை அதிகரிப்பதால், சாராத்தின் விலை அதிகரிக்கப்படப்போவதில்லை என்றார்.