சிறிலங்கா ஜனாதிபதிக்குத் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு கடிதம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குகின்ற தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினரால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் 7 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

இதன் ஜனாதிபதி பொது வேட்பாளராக பா. அரியநேத்திரனை நியமிப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த கட்டமைப்பின் உறுப்பினரை ஜனாதிபதி சந்திக்க விரும்புவதாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எனினும் குறித்த சந்திப்பு தொடர்பான போதிய விளக்கங்கள் வழங்கப்படாததன் காரணமாக, அது குறித்து மேலதிக விபரங்களை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அந்த கட்டமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது .

சந்திப்பில் பேசப்பட வேண்டிய விடயங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தெளிவான காரணிகளுடன் ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு கிடைத்தால், சந்திப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.