சுற்றாடல், கமத்தொழில், வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஹெக்டர் அப்புஹாமி

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவு செய்யப்பட்டார்.

அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (5) பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அதனை வழிமொழிந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, தன்னை தலைவராக தெரிவுசெய்தமை தொடர்பில் நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் சுற்றுச்சூழல் கட்டமைப்பை பாதுகாப்பது தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்று மேற்கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக உலக சுற்றாடல் தினமான நேற்றைய தினம் குழுவில் தெரிவித்தார்.

அத்துடன், கமத்தொழிலை மேலும் விருத்தி செய்வது தொடர்பான சிறந்த நடவடிக்கைகளை இந்தக் குழுவின் ஊடாக மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், அதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குழுவின் மூலம் நாட்டை சரியான திசையில் கொண்டுசெல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.