சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம்

காணி உறுதிகள் இல்லாமல் நாட்டு மக்களுக்கு சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீ.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர இலவசக் கல்வியின் ஊடாக அறிவைப் பகிர்ந்தளித்தார். தற்போதைய அரசாங்கம் அறிவோடு, உரிமையையும் பகிர்ந்தளிக்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மகாவலி வளவ வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 45,253 பேரில் 1,524 பேருக்கு, அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை  (17) நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதியால் அடையாள ரீதியாக காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

உறுமய திட்டத்தின் காணிகளை வழங்க வேண்டியவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை விடுத்திருக்கிறேன்.

மாவட்டச் செயலாளர்களும், நிள அளவையியல் திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு அந்தப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

நாட்டில் 75 வருடங்களாக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது சட்டபூர்வமாகவே அந்த உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். இது ஒரு வகையான புரட்சியாகும்.

நாடு என்ற வகையில் அனைவருக்கும் நெருக்கடியான காலம் உருவாகியது. அதனால் அனைவருக்கும் நட்டம் ஏற்பட்டது.  இப்போது நாடு நல்ல நிலையை அடையும் வேளையில் அதன் பலன்களும் மக்களை சென்றடைய வேண்டும். குறிப்பாக நாட்டுக்கு சோறு தரும் விவசாய மக்களுக்கு அவை நிச்சயமாகக் கிடைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கியது போலவே கொழும்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகள் வழங்கப்படும். அதனால்  இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கும்.

1944 களில் சீ.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கரவின் யோசனைக்கமைய அரச மந்திரிகள் சபையின் ஊடாக கல்வி அறிவைப் பகிர்ந்தளித்தோம். சுதந்திர கல்வியால் அந்த அறிவு அனைவருக்கும் பகிரப்பட்டது.  தற்போதைய அரசாங்கம் அறிவோடு, உரிமையையும் பெற்றுத்தருகிறது.

உங்களால் சிறந்த விளைச்சல் கிடைக்கிறது. ஆனால் உங்களுக்கு உரிமை இருக்கவில்லை. அந்த கஷ்டங்களை 3 பரம்பரைகள் அனுபவித்திருக்கின்றன.  இனியும் கஷ்டங்களைத் தரக் கூடாதென அரசாங்கம் தீர்மானித்தது. அதனால் விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த உறுமய வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டை நாம் பொறுப்பேற்ற வேளையில் எரிபொருள், மருந்து, உணவுத் தட்டுப்பாடு காணப்பட்டது.  2022 – 2023 சிறுபோகத்தில் விளைச்சல் அதிகரித்தது. அதனால் கடவுள் செயலால் இதனைச் செய்ய முடியும் என்று நம்பினோம். விவசாயிகளே அதற்குப் பக்கலமாக நின்றனர். இப்போது விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களை ஆரம்பித்துள்ளோம்.

விவசாயிகளுக்காக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இத்தோடு நின்றுவிடாது. காணிகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணி உரிமை கிடைப்பதால் மக்கள் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.

நீங்கள் அனைவரும் அந்த வேலைத்திட்டத்தின் பங்குதாரர்கள் ஆக வேண்டும். அதற்குத் தேவையான நிதி அடுத்த வருடத்திலிருந்து வழங்கப்படும். வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம்.  அதனால் விவசாய சேவை நிலையங்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காணி உரிமையின்றி 3 பரம்பரைகளாக சேவையாற்றிய விவசாய மக்களுக்கு நன்றி” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வன ஜீவராசிகள், வனவள பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,

“மக்களின் அடிப்படைத் தேவைகளான காணி, வீடு, உணவை ஜனாதிபதி பெற்றுத் தந்திருக்கிறார்.  பல பரம்பரைகளாக உங்களுக்கு கிடைக்காமலிருந்த உரிமை இப்போது கிடைத்திருக்கிறது.

காணி உறுதி கிடைத்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதற்கான சூழலை ஜனாதிபதி உருவாக்கியிருக்கிறார்.  20 இலட்சம் குடும்பங்களுக்கு உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்துக்காக விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நவீன விவசாய உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

நாட்டின் பாடசாலைகள் வைத்தியசாலைகள் கட்டமைப்பும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவத்தால் நாடு நல்ல நிலையை அடைந்துள்ளது. இனியும் மக்கள் பரீட்சித்து பார்க்காமல் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

விவசாய அமைச்சர மஹிந்த அமரவீர,

“காணிப் பிரச்சினைகள் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யும் அளவுக்கு வலுப்பெற்றிருந்தது.  அது பற்றிய முறைப்பாடுகளும் பொலிஸில் அதிகளவில் பதிவாகியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மிகப்பெரிய தனியார் மயப்படுத்தலின் கீழ், உங்களுக்குக் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கிலான மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.  கஷ்டமான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து அவருக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்.

வௌிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யாமல் உள்நாட்டு விவசாயிகளை ஜனாதிபதி நம்பியதால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளும் விளைச்சல் நிலங்களில் மீண்டும் கால் பதித்துள்ளனர்” என்று கூறினார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் லொஹான் ரத்வத்த,

“நாட்டின் காணிகளில் மூன்றில் ஒரு பங்கை மகாவலி அதிகார சபையே நிர்வகிக்கிறது.  ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவான உறுமய திட்டம் இங்கு வாழும் பெருமளவான மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றியுள்ளது.

சரிந்துபோன நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சரியான பாதைக்கு திருப்பியுள்ளார்.  நாட்டில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெருமளவில் உள்ளனர். சமூக ஊடங்களிலும் பல வேட்பாளர்கள் உள்ளனர்.  எவர் வந்தாலும் ஜனாதிபதி ரணிலின் வேலைத்திட்டம் அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தொடர வேண்டும்.  இவ்வாறான தருணத்தில் நாட்டை பற்றி நாம் சிந்திக்கத் தவறினால் மீண்டும் நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.

மாகாணத்தின் மகா சங்கத்தினர், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ, இராஜாங்க அமைச்சர்களாக சாணக்க வக்கும்புற, சஷீந்திர ராஜபக்‌ஷ, ஜகத் புஷ்பகுமார, லொஹான் ரத்வத்த, சப்பிரகமுவ மாகாண சபைத் தவிசாளர் காஞ்சன ஜயரத்ன, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சமன் தர்ஷன படிகோரல, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எல்.டீ.சீ.எம். அபேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.