ஜனாதிபதி தேர்தலின் பின்னரே பொருட்களை விநியோகிக்கலாம்

மாவட்ட செயலகங்களில் இருந்து பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படுவதாகவும், அதன் மூலம் குறித்த  ஒரு கட்சியானது வாக்காளர்களை   ஊக்குவிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இவ்வாறான பொருட்களை தற்போது விநியோகிக்க வேண்டாம் என ஆணைக்குழு நுவரெலியா மாவட்ட செயலகம் உட்பட  சகல மாவட்ட செயலகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகம் ஊடாக பல தோட்டப்பிரதேசங்களில் செயற்படும்  அமைப்புகளுக்கு ஒலிபெருக்கிகள், பாத்திரங்கள், கூடாரங்கள் போன்றவற்றை விநியோகிக்கும் வண்ணம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததாக நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு கடந்த  வெள்ளிக்கிழமை முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

தாம் சொல்லும் வரை குறித்த பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் தாம் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு தோட்டங்களுக்கு வரும் போது அவற்றை விநியோகிக்க வேண்டும் என்றும் தோட்டத் தலைவர்களுக்கு ஒரு அரசியல் கட்சி உத்தரவிட்டிருந்ததாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து தேர்தல் ஆணைக்குழுவானது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு 09/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மேற்படி செயற்பாடுகளை நிறுத்தும்படி கடிதம் அனுப்பியுள்ளது.

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக குறித்த பொருட்களை விநியோகிக்குமாறு தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால்   ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவ்வாறான பொருட்களை விநியோகிப்பது பொருத்தமானதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து. இது சில வேட்பாளர்களை ஊக்குவிக்கலாம், மற்றவர்களுக்கு பாதகமாக இருக்கலாம். எனவே ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்தப் பொருட்களை விநியோகிக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்க விரும்புகின்றேன் என அக்கடிதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.