ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல!

ஜனாதிபதித் தேர்தலில் எமக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தான் போட்டி நிலவும். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல, மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் மரியாதை வைத்துள்ளாரே தவிர ராஜபக்ஷ குடும்பத்தின் மீது மரியாதை வைக்கவில்லை என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (11)  மாலை இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நாங்கள் இன்றும் மரியாதை வைத்துள்ளோம்.அதேபோல் நாட்டு மக்களும் மரியாதை வைத்துள்ளார்கள்.

ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தின் மீது நாட்டு மக்கள் மரியாதை வைத்திருக்கவில்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

முதலாவதும் நாடு , இரண்டாவதும் நாடு, மூன்றாவதும் நாடு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுவார்.

தற்போதைய நிலையில் நாட்டை பற்றி மாத்திரமே சிந்திக்க வேண்டும் என்பதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.ஆகவே எமது தீர்மானத்துக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம்.

ஜனாதிபதித் தேர்தலில் எமக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தான் போட்டி. ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு ஒரு சவாலல்ல,ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரருக்கும்,நாமல் ராஜபக்ஷக்கும் இடையில் தான் போட்டி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம்.எமது தேர்தல் பிரசாரங்களை இவ்வாரம் முதல் ஆரம்பிப்போம்.ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.