டிஜிட்டல் மயமாகும் ஊழியர் சேமலாப நிதியத் தரவுகள்

மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இணைந்து ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.

தொழிலாளர் திணைக்களத்தின் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குக் குழு, பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் கூடிய போதே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் திணைக்களத்தில் முதலாளிகளைப் பதிவு செய்த பின்னர், குறித்த ஊழியர் சேமலாப நிதி, மத்திய வங்கிக்கு வழங்கப்படுவதாகவும், மத்திய வங்கி ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தொழிலாளர் திணைக்களத்திற்கு கொடுப்பனவுகள் பற்றிய தரவுகளை வழங்குவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எனினும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தரவுகளைப் பெறுவதற்குப் பதிலாக, தொடர்ந்து புதுப்பிக்கக்கூடிய ஒரு அமைப்பை தொழிலாளர் திணைக்களம் கொண்டிருக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது மக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.