டிஜிட்டல் முறைமையிலான சுயநிர்ணயத்தை தமிழர்களுக்கு வழங்கலாம்

பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. பொருளாதார படுகொலையாளிகளான ராஜபக்ஷர்கள் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிடுகிறார்கள்.பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்ஷர்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஊழல் மோசடியை இல்லாதொழிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஊழல்வாதிகள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக குறிப்பிடும் தரப்பினர் அந்த ஆதாரங்களை கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.ஊழல் மோசடிகளை தமது அரசியல் பிரச்சாரத்துக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஊழல் மோசடி தொடர்பில் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுக் கொண்டு மக்களை நாங்கள் தூண்டிவிடவில்லை.நீதிமன்றத்தை நாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கு வி.எப்.எஸ்.நிறுவனத்தின் ஊடாக விசா விநியோகிக்கும் முறைமையில் பாரிய மோசடி இடம்பெறுவதையும் இந்த முறைமையால் இலங்கையில் ஆட்புல எல்லைக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயர்நீதிமன்றத்தில் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினோம்.

தரவு மற்றும் ஆதாரங்களை பரிசீலனை செய்து வி.எப்.எஸ்.முறைமையிலான புதிய விசா விநியோகித்தல் முறைமைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படுகிறார்.

வெளிநாட்டு கையிறுப்பை அதிகளவில் ஈட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஜனாதிபதியின் இலக்குக்கு இவரால் பாதிப்பு ஏற்படும்.ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தாவிடின் அதன் பெறுபேறு அவருக்கு எதிர்வரும் மாதம்; 21 ஆம் திகதி கிடைக்கப் பெறும்.

தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை கோருகிறார்கள். இதனால் தான் பல்லாயிர கணக்கானோர் உயிரிழந்தார்கள்.அரச கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தினால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமையிலான சுயநிர்ணயத்தை வழங்க முடியும்.மொழிசார்ந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறாது.

பொருளாதார காரணிகளை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்போம். நாடு வங்குரோத்து நிலைக்கு செல்லும் தீர்மானத்தை எடுப்பதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்துரைப்போம்.

 

 

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.தற்போதைய முன்னேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம்.பொருளாதார கொள்கையினை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.

 

ஜனநாயகம் பற்றி தற்போது பேசும் தரப்பினர் 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பங்களாதேஸ் நாட்டின் தற்போதைய நிலைமையை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.இலங்கையை பங்களாதேஸ்,சூடான் ஆகிய நாடாக மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.