தனது பதவி நிலை குறித்து அர்ச்சுனா பகிரங்க தகவல்

மருத்துவ நிர்வாக துறையில் இருந்து பதவி விலகுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது சமூகவலைத்தள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் கூறுகையில், “இன்றிலிருந்து இந்த கறை படிந்த முறைமையில் மருத்துவ நிர்வாகியாக வேலை செய்ய மாட்டேன்.

அதேவேளை, உங்கள் வைத்தியசாலைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை ஒரு அரசியல்வாதியிடம் தெரிவியுங்கள்.

நான் எங்கு சென்றாலும் பி.எச்.சி அதிகாரிகளும் எமது மக்களும் என் மனதில் இருப்பார்கள்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த தகவலை மேலும் உறுதிப்படுத்துவதற்காக வைத்தியருக்கு அழைப்பை ஏற்படுத்திய போது தொடர்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதியால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தங்கு விடுதிகளில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்பும் அதனை மறுக்கும் வகையில் வைத்திய அதிகாரிகள் சங்கம் நடந்து கொள்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தனது பதவி நிலை குறித்து அர்ச்சுனா பகிரங்க தகவல் | Chavakachcheri Hospital Issue Archuna S Case

“நீதிபதியால் மிகத் தெளிவாக நான் ஆதார வைத்தியசாலையின் எனக்குரிய தங்கு விடுதிகளில் தொடர்ந்து இருக்கலாம் என்பதையும் அது அடிப்படை உரிமை என்பதையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இருப்பினும், வைத்திய அதிகாரிகள் சங்கம் நீதிமன்றத்தை அவதூறு செய்யும் நிலையில் மேற்படி தொழிற்சங்க போராட்டத்தை அறிவித்திருப்பது என்பது இலங்கையில் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும் என நான் கருதுகிறேன்.

மனசாட்சி உள்ள சட்டவாளர்கள் யாராவது யாழ்ப்பாணத்தில் இருப்பின் தயவு செய்து இவ்விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கோரியுள்ளார்.

 

 

 

 

 

அதேவளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டிருந்த நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றகோரி மீண்டும் இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

 

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் அர்ச்சுனாவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்ச்சுனாவை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்ததோடு, அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் விடுவித்தது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுமூகமான செயற்பாட்டிற்காக, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தாங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.

தனது பதவி நிலை குறித்து அர்ச்சுனா பகிரங்க தகவல் | Chavakachcheri Hospital Issue Archuna S Case

இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இராமநாதன் அர்ச்சுனா, இன்று காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் இல்லையேல் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என என தெரிவித்த வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை விடுதி வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ளது என்ற காரணத்தை குறிப்பிட்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நான்கு மணி நேரத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.