தமிழ்மக்களுக்குச் சுயாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும்

தமிழ்மக்களுக்கான தீர்வு சுயாட்சி அலகுகளுடன் கூடியதாக அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாகவுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியினர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, சோஷலிச மக்கள் மன்றம் ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகளும் காலிமுகத் திடல் அரகலய எழுச்சியில் இணைந்து நின்ற முற்போக்கு ஜனநாயக அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஒன்றிணைந்து அரசியல் வேலைத்திட்ட அடிப்படையில் உருவாக்கிய ஐக்கிய முன்னணி அமைப்பான மக்கள் போராட்ட முன்னணியின் யாழ்ப்பாணத்திற்கான முதலாவது ஊடக மாநாடு  செவ்வாய்க்கிழமை (23.07.2024) யாழ்.றிம்மர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் போராட்ட முன்னணியினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

13  ஆவது திருத்தம் தொடர்பாகப் பேசும் போதே தென்னிலங்கையில் பேரினவாதிகள் துள்ளிக் குதிக்கும் நிலையில் சுயாட்சி அதிகாரம் என்ற மிக உயர்ந்த அதிகாரக் கொள்கையை நாங்கள் தீர்வாக முன்வைத்துள்ளோம். இதனால், பேரினவாதிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்பதும் எங்களுக்குத் தெரியும். எனினும், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய தைரியத்தை நாங்கள் கொண்டுள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.