ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டமை தமிழரசு கட்சியை பொது வேட்பாளர் விடயத்தில் எமது வழிக்கு கொண்டு வரும் ஒரு உத்தியே என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பற்ற ஒருவர் நியமிக்கப்படுவார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒற்றுமையினை எதிர்பார்க்கின்றார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால், எங்களிடம் அது இல்லாதிருப்பது கவலைக்குரியது.
இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளராக தமிழரசு கட்சிக்குள் இருந்து ஒருவரை தெரிவு செய்திருப்பது என்பது தமிழரசுக் கட்சியை வழிக்கு கொண்டுவரும் உத்தியாகவே நான் கருதுகின்றேன் என தெரிவித்தார்.