ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதை கருத்தில் எடுத்து தமிழ் மக்களுக்குரிய நிரந்தர தீர்வுகளை விரைவாக வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தாங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையிட்டு நாங்கள் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். நீண்ட காலமாக ஆட்சி முறைமை மாற்றத்துக்காகப் போராடிய தங்களுக்கு கிடைத்த இந்த வெற்றியானது நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நாம் எண்ணுகின்றோம்.
இரண்டு முறை ஆயுத வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயன்றும் தங்களின் அமைப்பு தோல்வி கண்டது. அதன் பின்பு தாங்கள் விரும்பிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஜனநாயக முறையில் நீங்கள் எடுத்த நீண்ட கால முயற்சியின் பின் இன்று இந்த நாட்டு ஜனாதிபதி தேர்தல் மூலம் உங்கள் கனவை சாத்தியமாக்கியுள்ளீர்கள்.
இதை ஒரு வரலாற்று சாதனையாக நாம் கருதி இந்த வெற்றியை நாம் மனதாற பாராட்டுகின்றோம். அதேவேளை தமிழ் மக்களை பொறுத்தளவிலே தங்கள் உரிமைக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நீண்ட காலம் அஹிம்சை வழியில் போராடி எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், கல்வியில் தரப்படுத்தல் முறைமை அமுல்படுத்தப்பட்டமையினாலும், யாழ். நூல் நிலையம் எரிக்கப்பட்டமையினாலும், எமது உரிமைகள் மறுக்கப்பட்டமையினாலும் தமிழ் இளைஞர்கள் விரக்தியின் மத்தியில் ஆயுத போராட்டத்தில் இறங்கினார்கள்.
அந்த போராட்டம் வெளிநாடுகளின் உதவியுடன் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கான எந்தவித தீர்வும் இன்று வரை வழங்கப்படவில்லை. இது துரதிர்ஷ்டமானது.
தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்கள் இன்னும் சிறைகளிலே வாடுகின்றார்கள். காணாமல் போனவர்களுக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. போரின்போது கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் இன்னும் நண்பர்களின் வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும், தற்காலிக குடிசைகளிலும் வாழுகின்றார்கள். போர் காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் அகதிமுகாம்களில் இருக்கின்றார்கள். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே இந்தியாவிலிருந்து திரும்பியவர்களுக்கான புனர்வாழ்வு இன்னும் அளிக்கப்படவில்லை. இவை எல்லாம் தங்கள் முன்னுரிமை அடிப்படையில் உள்ள தீர்க்கப்படவேண்டிய அடிப்படை பிரச்சினைகளாகும்.
அடுத்ததாக, தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள். வடக்கு கிழக்கு அவர்களின் தாயகம். அவர்களுக்கென தனித்துவமாக கலை, கலாசார பண்பாடு உண்டு. இவற்றை பாதுகாக்க அவர்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தேவை என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
இந்த நாட்டிலே தமிழ் மக்கள் பல வகைகளில் புறக்கணிக்கப்படுகின்றார்கள். அரச உயர் பதவிகள் தொடக்கம் சிற்றூழியர்கள் வரை வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுகின்றார்கள். தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுகின்றன. பல வளங்களைக் கொண்ட வட மாகாணத்தில் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்படுகின்றோம்.
இதனாலேயே பெரும்பாலான தமிழ் மக்கள் புலம்பெயர்கின்றார்கள். எல்லா புறக்கணிப்புக்களின் எதிரொலியாகவே தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டார். சுமார் ஒரு மாத கால முயற்சியின் பயனாகவே பொது வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இவை எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு தாங்கள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பீர்கள் என்று நம்புகின்றோம். பொது வேட்பாளர் முன் நிறுத்திய கோரிக்கைகளையும் தேர்தல் காலத்தில் பரப்புரையின்போது தாங்கள் குறிப்பிட்ட விடயங்களையும், தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதையும் கருத்தில் எடுத்து தமிழ் மக்களுக்குரிய நிரந்தர தீர்வுகளை விரைவாக நீங்கள் வழங்குவீர்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம்.
எமக்குரிய தீர்வுகளை எல்லாம் வழங்கி எம்மையும் இந்நாட்டின் சம பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளுமிடத்து உங்களுடன் இணைந்து நாமும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.
இதன் மூலம் தங்கள் தலைமையில் இந்த நாட்டில் ஒற்றுமையும் பொருளாதார மேம்பாடும் சுபீட்சமும் நிலவும் என்று எதிர்பார்க்கின்றோம். மீண்டும் தங்களுக்கு எங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது.