தயாசிறியின் நடத்தை விசாரணைக் குழுவிலிருந்து கயந்த விலகினார் ; ஹக்கீம் இணைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் பாராளுமன்ற  நடத்தை தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க  விலகியுள்ளார். இவருக்கு பதிலாக  பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக  சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (06) காலை 9.30மணிக்கு கூடிய நிலையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்த அறிவிப்பை சபைக்கு விடுத்தார்

சபாநாயகர்  சபைக்கு மேலும்  அறிவித்ததாவது,

2025 மே மாதம் 20 ஆம் திகதி சபா பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் எனக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக  குழுக்களின் பிரதித் தவிசாளரான    ஹேமாலி வீரசேகர   தலைமையில்   வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும்   எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோர் உள்ளிட்ட குழுவொன்று என்னால் நியமிக்கப்பட்டு 2025 மே மாதம் 23ஆம் திகதி இச்சபைக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் அதிக வேலைப்பளு காரணமாக தன்னால் சேவையாற்ற முடியாது என்பதை  கயந்த கருணாதிலக்க 2025 ஜூன்   5ஆம் திகதி எழுத்து மூலம் தெரிவித்துள்ளதால், அவருக்கு பதிலாக அக்குழுவில் சேவையாற்றுவதற்காக  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம்   என்னால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை இச் சபைக்கு அறிவிக்கின்றேன் என்றார்.