திருப்புவனம்: 10 நாட்களாக மின்வெட்டில் தவிக்கும் கிராமம்

திருப்புவனம் துணை மின் நிலையம் அருகே கிராம மக்கள் 10 நாட்களாக மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் துணை மின்நிலையம் அருகேயுள்ளது தட்டான்குளம் கிராமம். மதுரை – ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் அமைந்த இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதித்து வருகின்றன. ரயில்வே கேட் அருகே 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. பத்து நாட்களுக்கு முன், அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

செல்லாண்டி அம்மன் கோயில் பகுதியில் ஆலமரக் கிளை ஒடிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மேலும் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன.

இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் மரக்கிளைகளை அகற்றி மின் விநியோகத்தை சீராக்கவில்லை.

இதனால் 10 நாட்களாக அப்பகுதி மின்சார விநியோகமின்றி இருளில் உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் இரவில் மெழுகுவர்த்தி, சிம்னி விளக்குகள் வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். கொசுத் தொல்லையால் தூக்கமின்றி தவிக்கின்றனர். மோட்டார்களை இயக்க முடியாததால் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள பம்பு செட் மோட்டார்களையும் இயக்க முடியாமல் பயிர்கள் கருகி வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பூங்கொடி, பாண்டீஸ்வரி ஆகியோர் கூறுகையில், மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளை அகற்ற யார் செலவழிப்பது என்ற பிரச்சினையில் மின்தடையை சீரமைக்காமல் உள்ளனர். ஊராட்சி நிர்வாகம், மின்வாரியம் இணைந்து மரக் கிளைகளை அகற்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் , என்றனர்.