தீபாவளி காலத்தில் எமது வர்த்தக செயற்பாடுகள் இடையூறின்றி இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள்

தீபாவளி பருவ காலத்தில் ஹட்டன் – டிக்கோயா நகர சபையானது வெளி பிரதேச வியாபாரிகளுக்கு நகரத்தின் பல இடங்களை ஏலத்தில் வழங்கியுள்ளது. அதற்கு நாம் எதிரானவர்கள் இல்லை. ஆனால், அவை எமது வழமையான வர்த்தக செயற்பாடுகளை பாதிப்பதாக இருக்கக்கூடாது என ஹட்டன் ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் நகர சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஹட்டன் லா எடம்ஸ் விருந்தகத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றபோது நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஹட்டன் தலைமை பொலிஸ் காரியாலய பொறுப்பதிகாரி, போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் பி.ஷண்முகராஜா,

எமது வர்த்தக செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாமல் வெளி பிரதேச வியாபாரிகள் தமது வியாபாரத்தை முன்னெடுப்பதை நகர சபை உறுதி செய்யவேண்டிய அதேவேளை நகரத்துக்கு வரும் மக்களின் பாதுகாப்பு குறித்து ஹட்டன் பொலிஸார் எமக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

வாகனங்களை நிறுத்துவதற்கு ஓர் இடத்தை தெரிவு செய்ய வேண்டும். பிரதான வீதியில் பாதையோர வர்த்தகத்துக்கு இடம் வழங்கினால் எமக்கு அது பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், அங்கு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் எம்.சோமசுந்தரம்,

இறுதி மூன்று நாட்களில் புதிய வியாபாரிகள் நகரத்தின் பல இடங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இதை நகர சபையின் வருமான வரி பரிசோதகர்கள் ஆராய வேண்டும்.

மேலும், தீபாவளிக்கு முதல் நாள் இரவு 12 மணியோடு அவர்களின் ஒப்பந்தம் முடிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்கள் நகரப் பகுதிகளில் தங்கி வியாபாரத்தை முன்னெடுக்கின்றனர் என்றார்.

இதற்கு பதிலளித்த நகரசபையினர் பிரதான வீதிகளில் இம்முறை நடைபாதை வியாபாரங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியதோடு கோரிக்கைகளை ஏற்றனர்.

மேலும், தீபாவளி காலத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாக ஹட்டன் பொலிஸ் தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ரஞ்சித் ஜெயசேன உறுதியளித்தார்.