தையிட்டிப் போராட்டத்திற்குத் தென்னிலங்கை சிங்கள சிவில் சமூக அமைப்பினர் ஆதரவு

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று வெள்ளிக்கிழமை(27.10.2023) மாலை விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே வீதியோரமாக எட்டாம் கட்டமாக மீண்டும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று சனிக்கிழமை(28.10.2023) இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இன்று குறித்த போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக போராட்டக்  களத்துக்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்த காணி உரிமைக்கான மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விகாரைக்குள் சென்று பொறுப்பான பௌத்த பிக்குவையும் சந்தித்தனர். இதன்போது குறித்த குழுவினரால் சிங்கள மக்கள் வாழாத பகுதியில் எதற்கு விகாரை? தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணியில் ஏன் அமைத்தீர்கள்? எனக்  கேட்கப்பட்ட போது பிக்கு எழுந்து சென்று விட்டதாக மேற்படி தென்னிலங்கை குழுவினர் வெளியே வந்து கருத்துத் தெரிவித்தனர். பின்னர் போராட்டக் களத்துக்குச் சென்று தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்துக்குத் தமது தார்மீக ஆதரவையும் தெரிவித்தனர்.