தொலைத்தொடர்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலிக்கப்பட்டு அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம், தொழில்நுட்ப அமைச்சு, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக கடந்த மே 04ஆம் திகதி தொழில்நுட்ப அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அண்மையில் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைய, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து குறித்த சட்டமூலத்துக்குத் தேவையான அனைத்துத் திருத்தங்களும் முன்வைக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். உலகின் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு அமைவாக குறித்த சட்டமூலத்தை மீளாய்வு செய்வது காலத்தின் தேவை எனவும், இதற்கு முன்னர் மூன்று தடவைகள் அமைச்சின் உபகுழுவின் ஊடாக இச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்ததாகவும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

இதற்கமைய, இதுவரை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றும் வகையில் தொலைத்தொடர்புத் துறையில் உள்ள சகல தரப்பினருடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இதன் ஊடாகக் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

தொலைத்தொடர்பு அலைவரிசைகளை வழங்கும்போது போட்டித் தன்மையின் கீழான பொறிமுறையொன்று இதன் ஊடாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தின் ஊடாகத் தயாரித்து தொலைத்தொடர்பு துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உருவாகும் அதேவேளையில், இந்த வணிகத்தை நடத்தும் நிறுவனங்களை முறையாக ஒழுங்குமுறைப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு முறைக்கான அனுமதி மற்றும் அலைவரிசை அனுமதி முறைகளுக்கு மேலதிகமாக மூன்று விதமான அனுமதிவழங்கும் முறைகள் இந்தத் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்தத் திருத்தங்கள் மூலம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பலப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டித் தன்மையின் ஊடாக கட்டணங்களைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பை வழங்கும் சாதகமான நிலைமை உருவாகும் என்றும், இது உலகளாவிய ரீதியில் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், கடல்வழியான தொலைத்தொடர்பு கேபிள்களின் பாதுகாப்புத் தொடர்பிலும் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த, கௌரவ சஹான் பிரதீப் விதான மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.