சர்வதேச தொழிலாளர் தினத்தில் மேதின கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு பதிலாக, கடந்த காலம் பூராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொழிலாளர்களை கெளரவித்து, அவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை தேசிய சேவை சங்கத்தில் மேற்கொள்ள தீர்மானித்திக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினமான எதிர்வரும் மே முதலாம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு தொடர்பில் ஊடங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (22) பிட்கோட்டையில் அமைந்துள்ள தேசிய ஊழியர் சங்கத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டில் தொழிலாளர் சமூகத்துக்காக குரல்கொடுத்துவரும் பிரதான தொழிற்சங்கம் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய சேவை சங்கம். வரலாற்றில் தொழிலாளர்களின் அதிகமான கோரிக்கைகளை வென்று கொடுத்த சங்கமாகும். இது ஜே.ஆர். ஜயவர்த்தனவின் வழிகாட்டுதலும் அமைக்கப்பட்ட சங்கமாகும்.
அதனால் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறோம். பிரதானமாக இந்த முறை மேதினம் வெசாக் தினத்தில் வருவதால், மேதின கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு பதிலாக, கடந்த காலம் பூராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொழிலாளர்களை கெளரவித்து, அவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திக்கிறோம்.
பிரதானமாக தேசிய சேவை சங்கத்தில் பல அர்ப்பணிப்புகளுடன் வேலை செய்தவர்கள், ஓய்வுபெற்றவர்கள். பல்வேறு கோரிக்கைகளை உயிர் தியாகம் செய்து வெற்றியை பெற்றுத்தந்த குடும்ப உறுப்பினர்கள் என 250 பேரை மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு இந்த இடத்துக்கு அழைத்து கெளரவித்து ஊக்குவிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
அதேநேரம் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 5 மணியில் இருந்து 9 மணிவரை மருதானை புகாரி ஹோட்டலின் அனுசரணையில் சுமார் 3ஆயிரம் பேருக்கு பிரியானி தானசாலை ஒன்றை மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் என்றார்.





