நாடாளுமன்றமும் நிறைவேற்றதிகாரமும் சட்டத்துறையை மதிக்காவிட்டால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது!

நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் பாராளுமன்றம் ஆகிய முத்துறைகளும் ஒற்றுமையுடனும் பலத்துடனும் இருந்தால் மாத்திரமே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். அத்தோடு பாராளுமன்றமும் நிறைவேற்றதிகாரமும் சட்டத்துறையை மதிக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது என முன்னாள் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீதிமன்ற உத்தரவை சவாலுக்குட்படுத்துவது தவறான முன்னுதாரணமாகும். முழு உலகும் இலங்கையை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் சட்டத்தை மதித்து அதற்கமைய செயற்பட வேண்டும். தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், ஒரு முறைமையின் கீழ் செயற்பட வேண்டும்.

நிறைவேற்றதிகாரம், சட்டத்துறை மற்றும் பாராளுமன்றம் ஆகிய முத்துறைகளும் பலமாகவும் முரண்பாடுகள் இன்றியும் செயற்பட்டால் மாத்திரமே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமெனில் நாட்டில் சட்டம் மதிக்கப்பட வேண்டும். மாறாக அதனை சவாலுக்கு உட்படுத்தக் கூடாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவரும் கட்டுப்பணம் செலுத்தலாம். அதற்காக உரிமை சகல இலங்கை பிரஜைகளுக்கும் காணப்படுகிறது. ஆனால் மறுபுறம் தேர்தல் செலவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். செலவுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு யோசனையொன்றையும் சமர்ப்பித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் முதலிரண்டு இடங்களைப் பெறுபவர்கள் தவிர ஏனைய அனைவரது கட்டுப்பணமும் அரசுடைமையாகியுள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.