நிதியில்லையென காரணம் கூறாமல் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துங்கள் !

ஏறத்தாழ ஒரு முழுமையான பதவிக்காலத்தை இழந்திருக்கும் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டின் ஜனநாயக மரபைக்காக்குமாறு ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளுருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

2024ஆம் ஆண்டுதேர்தல் ஆண்டாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அனேகமாக அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்பாக ஜனாபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

வருகிற 2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகஉள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஏற்கனவே வேட்புமனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பலகோடி நிதியை வேட்பு மனு தாக்கலுக்காக கட்டியுள்ளனர்.

ஆனால் தேர்தலுக்கு நிதி இல்லை என்று அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லி குறித்த தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்பது தெரியாதநிலையில் உள்ளது.

உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இரத்துசெய்யப்படலாம் என்றும் அதற்கானசட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்களும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களும் 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாகாணசபைகளுக்கான எல்லைமீள் நிர்ணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டதாகவும் மீள்நிர்ணயம் செய்த பின்பு தேர்தல்கள் நடைபெறும் என்றும் பேசப்பட்டாலும் எல்லைகளை மீளவும் திருத்திக்கொள்வதற்கான எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆகவே, மாகாணதேர்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் படி தமிழர் தரப்பு கோரிய பொழுதும் அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மாறாக, வடக்கு- கிழக்கில் தான் விரும்பிய ஆளுநர்களை நியமித்து, தான்தோன்றித்தனமான முறையில் பௌத்தபிக்குகளும் இராணுவமும் பொலிசாரும் கூட்டாககாணிகளைக் கபளீகரம் செய்வதும் அத்தகைய இடங்களில் புதிது புதிதாக புத்தகோயில்களைக் கட்டுவதும் எங்கோ தூரப்பிரதேசங்களில் உள்ளசிங்களமக்களைக் கொண்டுவந்து இங்குகுடியேற்றுவதுமாகஅரசாங்கம் தனதுநிகழ்ச்சிநிரலைமுன்னெடுத்துச் செல்கின்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரபரவலாக்கத்தின் ஊடாகமாகாணசபை முறைமை ஒன்று உருவாக்கப்பட்டது.

வடக்கு-கிழக்குதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகமாகாணசபை முறைமை இல்லாவிட்டாலும் கூட,அதுவே இந்தஅரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இருக்கின்றது.

அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்காக அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மாகாணசபை அதிகாரத்தில் இல்லாதகாலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாகவும் ஏனைய வழிமுறைகளிலும் மாகாணத்திற்கு உரித்தான பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பறித்துக்கொண்டது.

இன்றும் அது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.இதனூடாக மாகாணசபை ஒருஅர்த்தமற்ற நிர்வாக அலகாக மாற்றப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலையைஅரசாங்கம் ஏற்படுத்திஉள்ளது.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டு கௌரவமாக வாழவேண்டு மென்றஅடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதுடன்,பதின்மூன்றாவதுதிருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இன்று மாகாணசபைக்கான தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்து அதே சிங்களபௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை இலங்கைஅரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதிதேர்தல்,நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள இருக்கின்ற ஜனாதிபதியோ அல்லது ஏனைய அரசியல் கட்சிகளோதமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளவிரும்பின்,குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கிற்கான மாகாணசபைகளுக்கான தேர்தல்களையாவது நடத்தி அதற்கான அதிகாரங்களை வழங்கி அந்தமாகாண நிர்வாகங்கள் திறம்பட செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

சரிவதேச கடன்களை மீளச்செலுத்துவதற்கான காலங்கள் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல்களுக்கான நிதி இல்லை என்று கூற முடியாது.

ஆகவே, ஏனைய தேர்தல்களுக்கு முன்பாக குறைந்தபட்சம் வடக்கு-கிழக்குமாகாணசபைத் தேர்தல்களையாவது உடனடியாக நடத்தமுன்வர வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தைக் கோருகின்றோம் என்றுள்ளது.