பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் வெலிக்கடையில் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்  கண்டி மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நகை கடை மற்றும் வீடுகளை உடைத்துத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து, 5 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், திருடப்பட்டதாகக் கூறப்படும் 3 தங்க மாலைகள் , 3 தங்க வளையல்கள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.