பெருந்தோட்ட உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மீளப் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அத்தோடு பெருந்தோட்டங்களை கிராமங்களாக்குவதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது குறிப்பிடப்பட்டதைப் போன்று 7 பேர்ச் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி லோரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பல சுற்று பேச்சுவார்த்தைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் என பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் ஒத்துழைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு நன்றி கூறுகின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருடன் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் நானும் கலந்து கொண்டிருந்தோம். இதன் போது பெருந்தோட்ட கிராமங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய நல்லாட்சி அரசாங்கத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு 7 பேர்ச் காணி மற்றும் காணி உரிமத்தை முதலில் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரினோம்.
அத்தோடு பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சை நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினோம். இது தொடர்பில் மனுதாக்கல் செய்துள்ள பைஸர் முஸ்தபாவுடன் பேசி வழக்கினை மீளப்பெறச் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் தேர்தலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கும். பெருந்தோட்ட மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெற்றுக் கொடுப்போம் என்றார்.