பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பினை கௌரவமான முறையில் ஏற்றுக் கொள்கிறோம். பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதியை இயன்றளவு விரைவாக அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு  2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு கௌரவமான முறையில் ஏற்றுக் கொள்கிறது.

அரசியலமைப்புக்கு அமைய 2024.07.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய 2024.09.21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.அது தொடர்பான 2024.08.28 ஆம் திகதி ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் மாவட்ட பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள்,அரச அச்சகர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடியதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க குறைந்தபட்சம் 30 -35 வரையான நாட்கள் தேவைப்படும் என அவதானிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024.09.24 ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு திகதியை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

நாட்டின் சட்டவாக்கத்துறைக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் நோக்கத்துக்கு முன்னுரிமையளித்து செயலாற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேரிட்டுள்ளது. அதேபோல் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு காலப்பகுதியினுள் தீர்மானிக்கப்பட்டவாறு பாராளுமன்றத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தினுள் அதாவது 2024.10.26 ஆம் திகதி காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கும் நேரிட்டுள்ளது.

நாட்டு மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளை பாதுகாப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அதன் செயற்பொறுப்கை சிறந்த முறையில் புரிந்துக் கொண்டு செயலாற்றுவதுடன், 2024. ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுடன் இசைந்து சட்டத்தினால் விதித்துரைக்கப்பட்டுள்ள தேர்தல்களை நடாத்தும் செயற்பொறுப்பையும் கவனத்திற் கொண்டு பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் இயன்றளவு விரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு திகதி அறிவிக்கப்படும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சிவில் அமைப்பினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கலை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ‘ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டுள்ளதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. ஜனாதிபதி உட்பட தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளனர்’ என தீர்ப்பளித்ததுடன், அரச தரப்பினரது ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்திருந்தது.